ஸ்ரீவைகுண்டம், ஜூன்.29:
கருங்குளம், செய்துங்கநல்லூர் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி அறிவுறுத்தலின்பேரில் சித்த மருத்துவதுறையினர் பொதுமக்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் அரசு பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
இந்தவரிசையில், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட கருங்குளம், செய்துங்கநல்லூர், அய்யனார்குளம்பட்டி பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட சித்த மருத்துவதுறையினர் தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, அப்பகுதிகளிலுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்டு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி வழிகாட்டுதலின்படி கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள். சுந்தரி, மேரிஸ்டெல்லா ஆகியோர் தலைமை வகித்தனர். துணை இயக்குநர் டாக்டர்.கிருஷ்ணலீலா இம்முகாமினை துவங்கி வைத்தார். கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் சித்த மருத்துவர்கள் கலா, செல்வக்குமார் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் இப்பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் கபசுர குடிநீர் வழங்கினர். இதில், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்அடைந்தனர்.
இதில், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், சித்த மருத்துவ துறையினர், தன்னார்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை, சித்த மருத்துவர்கள் செல்வக்குமார், கலா, மருந்தாளுநர் கமலவள்ளி, சுகாதார ஆய்வாளர் சண்முகப்பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.