தூத்துக்குடி
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விமான போக்குவரத்து நடைபெற்று வந்தது. தற்போது, இரவு நேரத்திலும் விமான போக்குவரத்தை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு தூத்துக்குடி விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ‘’தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமானங்கள் இயக்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக 2.5 கோடி ரூபாய் செலவில் ஓடுபாதையை 280 மீட்டர் ஆக உயர்த்துதல் உள்ளிட்ட எட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு தூத்துக்குடி விமானநிலையத்திலிருந்து இரண்டு லட்சத்து 36 ஆயிரம் பயணிகள் வந்து சென்றுள்ளனர்,
தற்போது 24 மணி நேரமும் விமானங்கள் இயக்கப்படுவதன் மூலம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தை சார்ந்த போது மக்கள் வர்த்தகர்கள் பெருமளவில் பயனடைவார்கள். மேலும் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் சர்வதே அளவில் 321-ரக விமானங்களையும் தூத்துக்குடி விமான நிலையத்தில் கையாளமுடியும். ஓடுபாதையை 3115 மீட்டாராக உயர்த்துவதற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்லும் வகையில் பயணிகள் முனையத்தை 10,800 மீட்டர் சதுர பரப்பளவுக்கு அளவிற்கு விரிவாக்குத்தல், உள்ளிட்ட பணிகள் 380 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட விரிவாக்க பணிகளில், ஓடு பாதையை விரிவாக்கும் பணிக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதால் விரைவில் பணி தொடங்கப்படும். தூத்துக்குடி விமான நிலையத்தை ஒட்டி இந்திய கடற்படை, இந்திய கடற்படையின் விமானங்கள் இயங்கு தளம் அமைக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்’’ என்றார். பேட்டியின்போது விமான நிலைய மேலாளர் ஜெயராமன் உடனிருந்தார்.