சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கு – சி.பி.ஐ யின் முதல் நாள் விசாரணை 7 மணி நேரம்

0
53
sathankulam cbi

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி விதிகளை மீறியதாக காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவியாபாரிகளும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் உயிரிழந்தனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தாக்கப்பட்டதில்தான் இருவரும் இறந்தார்கள் என்கிற குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து உத்தரவிட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் 10 காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடியிடமிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உத்தரவிட்டது. சிபிசிஐடியிடமிருந்து ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட சிபிஐ இன்று(11.07.2020) விசாரணையை தொடங்கியது. முதல்கட்டமாக உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு நேரில் சென்ற சிபிஐ அதிகாரிகள், ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களிடமும் 4 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். ஜெயராஜ் பென்னிக்ஸ் இருவரும் காவல் நிலைய விசாரணைக்கு பிறகு கோவில்பட்டி கிளை சிறைக்கு அழைத்துச் செல்லும்போது நலமுடன் இருப்பதாக அறிக்கை அளித்த சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அரசு மருத்துவமனை முழுவதையும் சிபிஐ போலீசார் தாங்கள் கொண்டு வந்த கேமரா மூலம் வீடியோ பதிவு செய்து கொண்டனர். சுமார் 7 மணி நேரம் விசாரணைக்கு பிறகு இன்றைய விசாரணையை சிபிஐ அதிகாரிகள் முடித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here