காமராஜர் வரலாறு

0
638
k.kamarajar

இந்திய வரலாற்றில் ஒரு சரித்திர நாயகனே ஈன்றெடுத்த விருதுநகர் முன்பு ஒரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்து இருந்திருந்தது. அப்போது அந்த ஊர் விருதுபட்டி என்று வழங்கப்பட்டது. பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த வணிகத் தளமாக விளங்கி வந்தது விருதுநகர்.

விருதுபட்டியில் நற்பண்புகள் நிறைந்த வணிகர் குமாரசாமி என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி சிவகாமி அம்மையார் கணவனுக்கு ஏற்ற துணைவியாக திகழ்ந்தார். குமாரசாமி தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். குமாரசாமி தம்பதியருக்கு 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி ஆண்மகவு ஒன்று பிறந்தது அந்தக் குழந்தைதான் இந்திய வரலாற்றில் தூய தலைவனாய் விளங்கிய காமராஜர்.

குழந்தை பிறந்தவுடன் வைக்கப்பட்ட பெயர் காமாட்சி. இதுதான் காமராஜரின் பெயர். பின்னர் தாயார் சிவகாமி அம்மையார் காமராஜ் என்று அழைக்கத் தொடங்கினார். காமராஜருக்குப் பிறகு நாகம்மாள் என்ற தங்கை பிறந்தாள். சிறுவயதில் காமராஜ் மிகவும் அடக்கமான சுபாவம் கொண்ட பிள்ளையாக விளங்கினார். அறிவுக் கூர்மை அதிகம் படிப்பில் ஆர்வமுள்ள மாணவனாக திகழ்ந்தார்.

விருதுபட்டியில் வேலாயுதம் என்பவர் நடத்தி வந்த தொடக்கப்பள்ளியில் காமராஜரை சேர்த்தார்கள்.சில நாள்களில் பள்ளியிலிருந்து சிறுவன் காமராஜை நிறுத்திவிட்டார்கள். பிறகு ’ஏனாதிநாத நாயனார் வித்யாசாலை’ என்ற பள்ளியில் சேர்த்தனர். ஆசிரியர் முருகையா என்பவரிடம் தமிழ் படிக்கவும் எழுதவும் கற்ற பின்னர், அந்த பள்ளிக்கூடத்திலும் காமராஜர் தொடர்ந்து கல்வி பயிலவில்லை.

மறு ஆண்டு ’சத்ரிய வித்யா சாலா’ என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒரு ஆண்டு கூட முழுமையாக காமராஜர் கல்வி பயிலவில்லை. காமராஜரின் தந்தை குமாரசாமி இயற்கை எய்தினார். அப்போது காமராஜருக்கு 6 வயது. சிவகாமி அம்மையார் துன்பத்தில் துவண்டு போனார். காமராஜரின் மாமா கருப்பையா ஊர் நாட்டாண்மைகாரர். அவரது உதவியோடு சிவகாமி அம்மையாரும் மகன் காமராஜரும் வாழ்ந்துவந்தனர்.

காமராஜர் வழக்கம் போல் பள்ளிக்கூடம் சென்று வந்தார். வீர விளையாட்டுகளில் அவருக்கு நாட்டம் அதிகம் இருந்தது. தம்மையொத்த சிறுவர்களுக்கு எல்லாம் காமராஜரே தலைவராக விளங்கினார். நண்பர்களிடத்தில் அன்பும் அபிமானமும் அதிகமுள்ளவர் காமராஜர். பிள்ளை நன்றாக படிக்க வேண்டும் என்று அன்னை சிவகாமி எண்ணினார். மகனோ விளையாட்டில் ஆர்வம் உள்ளவனாக இருந்தார்.

12 வயது வரை இவ்வாறு இருந்த காமராஜரை தன் ஜவுளிக்கடையில் அவரது மாமா கருப்பையா பணியில் அமர்த்திக் கொண்டார். கல்வியை நிறுத்தி விட்டதால் காமராஜர் சிறிதும் கவலைப்படவில்லை ஜவுளிக்கடையில் வேலை பார்ப்பது அவருக்கு பிடித்தமானதாக இருந்தது. ஜவுளிக்கடையில் வேலை செய்த நேரம் போக மற்ற நேரங்களில் காமராஜரை விருதுநகரில் இருந்த கொடி கடை ஒன்றில் பார்க்கலாம்.

அந்தக் கடைக்கு அவருடைய நண்பர்கள் அனைவரும் வருவார்கள். அந்த சமயத்தில்தான் முதல் உலகப்போர் தொடங்கியது..போர்ச் செய்திகளை மற்ற செய்திகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் சிறுவன் காமராஜருக்கு ஏற்பட்டது. போர்ச் செய்திகளை படிக்கும் போதே அவர் இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் படிக்கலானார். சிறிது சிறிதாக காமராஜர் நெஞ்சில் நாட்டுப்பற்று வளரத்தொடங்கியது. காமரஜர் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அறிவதில் அவர் ஆர்வம் காட்டினார். காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்யும் பொதுக் கூட்டங்களுக்கும் தொடர்ந்து போக தொடங்கினார்.

டாக்டர் வரதராஜுலு நாயுடு தமிழ் தென்றல் திரு வி கல்யாண சுந்தரனார் போன்றோர் விருதுநகருக்கு அடிக்கடி வந்து போவார்கள். காமராஜர் அந்த கூட்டங்களுக்கு தவறாமல் சென்று விடுவார். காங்கிரஸ் தலைவர்களின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள் சிறுவன் காமராஜரின் சிந்தனையை கவர்ந்தன. அவர் நெஞ்சில் நாட்டுப்பற்று கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

அவர் தீவிர தேசியவாதியாக மாறினார். ஆனாலும் அவர் கட்சிப் பணியில் ஈடுபட வில்லை. காமராஜர் காங்கிரஸ் கட்சியில் தீவிரமான தொண்டராக சேர்ந்து பணியாற்ற விரைவிலேயே வாய்ப்பு கிடைத்தது. முதல் உலகப்போர் முடிந்தது. போரில் பிரிட்டிஷ் அரசுக்கு வெற்றி கிடைத்தது. அந்த சமயத்தில் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நடந்து கொண்டிருந்தது.

விடுதலைப் போராட்டத்தை எப்படியும் நசுக்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தது பிரிட்டிஷ் அரசு. அதற்காக நியாயமற்ற சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அந்த சட்டத்தின் பெயர் தான் ரவுலட் சட்டம் என்பதாகும். அந்த சட்டத்தின்படி தேசியவாதிகளை எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யலாம். விசாரணை எதுவும் இல்லாமல் சிறையில் வைக்கலாம். இந்த அநியாயமான சட்டத்தை கண்டு இந்தியர்கள் குமுறினார்கள்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து சத்தியாக்கிரகம் ஒன்றை காந்திஜி நடத்தினார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் நடத்தப்பட்டது. சத்தியாகிரகம் தொடங்கி நான்கு நாட்கள் கழிந்தன. பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனால் பஞ்சாபில் கலவரம் ஏற்பட்டது.பிரிட்டிஷ் அரசின் போக்கை கண்டித்து பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர்.

அதை அறிந்த ஆங்கிலேய இராணுவத் தளபதி ஜெனரல் டயர் என்பவன் மிகுந்த ஆத்திரம் கொண்டான். கூட்டத்தை நோக்கி சுடும்படி ஆணையிட்டான். கண்மூடித்தனமாக கூட்டத்தை நோக்கி சுட்டனர். கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து வெளியேற வேண்டுமானால் ஒரே வழி தான். ஆங்கிலேயர்கள் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு குண்டு மழை பொழிந்தார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் குண்டடிபட்டு இறந்தனர்.

இக்கொடுமையை அறிந்து நாடு கொந்தளித்தது. டாக்டர் வரதராஜுலு நாயுடு விருதுநகருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். ஊக்கமும் உணர்ச்சியும் மிகுந்த அந்த சொற்பொழிவை கேட்ட காமராஜர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வெள்ளையர் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்தார். காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஆனார்.

காமராஜர் தேசிய இயக்கத்தில் ஈடுபடுவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று அவரது மாமா கருப்பையா எண்ணினார். காமராஜரின் மற்றொரு மாமா காசி நாராயணன் என்பவர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்திருந்தார். அவரிடம் பணியாற்றுமாறு காமராஜரை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.

1924 ஆம் ஆண்டு காமராஜர் திருவனந்தபுரத்தில் இருந்தார். அப்போது கேரளத்தில் வைக்கம் என்ற ஊரில் சத்தியாகிரகம் ஒன்று நடைபெற்றது. வைக்கத்தில் ஜாதி இந்துக்கள் வாழ்ந்த தெருவிலேயே தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்று பன்னெடுங்காலமாக தடை இருந்து வந்தது. தாழ்த்தப்பட்டோர் தெருவழியே நடப்பதற்காக உரிமையை பெற்றுத்தர வேண்டும் என தலைவர்கள் நினைத்தனர்.

இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று தந்தை பெரியார் தீவிரமாக போராடி வந்தார். இந்தப் போராட்டத்தின் தொடர்பான சத்தியாகிரகத்தில் காமராஜரும் கலந்து கொண்டார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இந்தப் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது.தாழ்த்தப்பட்டோர் வைக்கத்தில் அந்த தெருவழியே நடப்பதற்கு உரிமை பெற்றனர்.

விருதுநகரில் இருந்த கருப்பையாவுக்கு காமராஜர் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட செய்தி தெரியவந்தது. எங்கிருந்தாலும் காமராஜர் பொதுத் தொண்டில் ஈடுபடவே செய்வார் என்பதை கருப்பையா உணர்ந்தார். ஆகையால் காமராஜரை மீண்டும் விருதுநகருக்கு அழைத்துக்கொண்டார். விருதுநகர் திரும்பிய காமராஜர் மிகவும் தீவிரமாக அரசியலில் ஈடுபடலானார்.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் பரப்புவதில் மிகுந்த அக்கறை செலுத்தினார். நாட்டுப் பற்று கொண்ட நண்பர்கள் பலர் அவருக்கு இருந்தனர். நண்பர்களுடன் விருதுநகர் ரயில் நிலையம் சென்று இரயிலில் பயணம் செய்தவர்களிடம் நிதி திரட்டினார். இந்த நிதியை கொண்டு காமராஜரும் அவரது நண்பர்களும் விருதுநகரில் காங்கிரஸ் கட்சி வேரூன்றசெய்தனர். தீரர் சத்தியமூர்த்தி, டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்ற தலைவர்களை அழைத்து வந்து பொதுக்கூட்டங்கள் நடத்தினர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரு பிரிவுகள் அமைவது தவிர்க்க முடியாதது ஆனது. தீவிரவாதிகள் காந்திஜியுடன் கருத்து வேறுபாடு கொண்டனர். சென்னை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. ஒரு பிரிவு தீவிரவாதிகளை கொண்டது. மற்றொன்று மாற்றம் விரும்பாத மிதவாதிகள் கொண்டது.

தீவிரவாதிகளின் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி இரண்டாவது பிரிவுக்கு ராஜாஜி தலைவர். காமராஜர் சத்தியமூர்த்தியின் தலைமையை விரும்பி கேட்டார். தீவிரவாதிகளும் ஒருவரானார். தீவிரவாதியான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தீவிர தொண்டர் ஆனார் காமராஜர். காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்றார் காமராஜர். மற்றவர்களையும் போராட்டங்களில் கலந்து கொள்ளும்படி தூண்டினார்.

ஆங்கிலேய அரசாங்கம் உப்புக்கு வரி விதித்தது அந்த அநியாய வரியை எதிர்த்து காந்திஜி உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார். காமராஜர் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். போராட்டத்தில் கலந்துகொண்ட காமராஜருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. காமராஜர் முதன்முதலாக சிறைக்குச் சென்றார். பெல்லாரி சிறையில் இருந்தார். அந்த நேரத்தில் காமராஜரை வளர்த்த பாட்டி பார்வதி அம்மாள் உடல் நலம் சரியில்லாத நிலையில் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டது.

இதை அறிந்த உறவினர்கள் காமராஜரை பரோலில் விடுவிக்க அரசிடம் அனுமதி பெற்று பெல்லாரிக்கு சென்று சிறையிலிருந்த காமராஜரை கண்டு விபரம் கூறினர். அவர்கள் கூறியதை காமராஜர் பொறுமையாக கேட்டார். நிபந்தனைகளை ஏற்று விடுதலை பெறுவதை அவர் மறுத்தார். பரோலில் விடுதலை பெற மறுத்துவிட்டார். வீட்டை விட, உறவினர்களை விட இந்த நாடு முக்கியம் என்று எண்ணினார் காமராஜர்.

உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை பெற்ற பிறகு மதுரையில் 1930ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெற்றது. சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ராஜாஜி தலைவராகவும், தீரர் சத்தியமூர்த்தி துணைத் தலைவராகவும், எம் பக்தவச்சலம் மற்றும் டி எஸ் எஸ் ராஜன் ஆகிய இருவரும் செயலாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். காமராஜர் ராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே காமராஜர் தமிழ்நாடுகாங்கிரஸ் வரலாற்றில் முதல் முதலில் ஏற்ற முக்கிய பதவி ஆகும்.

காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட சிறிது காலத்திற்குப் பின்னர் இர்வினுடையபதவி காலம் முடிந்து அவர் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்றார். அவருக்குப் பிறகு இந்தியாவுக்கு அரச பிரதிநிதியாக வந்த வெலிங்ஸ்டன் பிரபு காந்தி – இர்வின் ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. இதனால் ஒப்பந்தம் தோல்வி அடைந்தது. இரண்டாவது வட்டமேசை மாநாட்டுக்கு சென்றிருந்த காந்திஜியும் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் தோல்வியுடன் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு திரும்பினார்.

பம்பாய் துறைமுகத்தில் கப்பலில் வந்து இறங்கிய காந்திஜியை பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் காரணமின்றி கைது செய்யப்பட்டனர். அப்போது தமிழ்நாட்டில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காமராஜரும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுதலையானார்.

1933 ஆம் ஆண்டு சென்னை மகாணச் சதிவழக்கிலும் காமராஜர் பெயர் இடம்பெற்றிருந்தது. விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் காமராஜர் அவர் அவர்களையும் அவர்கள் நண்பருமான முத்துச்சாமி, மாரியப்பன் அவர்களையும் சேர்த்து வழக்கு ஜோடித்தது பிரிடீஷ் அரசாங்கம். காமராஜர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும். அதுவரையிலும் திருமணம் செய்து கொள்வதில்லை என்று தீர்மானித்தார். கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்தார். அந்த அளவு நாட்டுப்பற்று உள்ளவர் காமராஜர்.

சத்தியமூர்த்தி சிறந்த அறிஞர்; ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகிய மூன்றிலும் வல்லவர்; கலைகளில் மிகுந்த ஆர்வம் உடையவர். உண்மையான காங்கிரஸ் தொண்டர்களிடம் அளவற்ற அன்புடையவர். காமராஜரின் தொண்டுள்ளமும், நாட்டுப்பற்றும் சத்தியமூர்த்தியை மிகவும் கவர்ந்தன. அவர் காமராஜரை மிகவும் நேசித்தார். தமது நம்பிக்கைக்கு உரிய முக்கியமான ஒருவராகக் கருதினார். காமராஜரும் சத்தியமூர்த்தியின் தலைமையை விரும்பி ஏற்றுக்கொண்டார். சத்தியமூர்த்தியின் வலதுகரமாக காமராஜர் விளங்கினார்.

1936ஆம் ஆண்டில் சத்தியமூர்த்தி,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காமராஜரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. காமராஜர் சாத்தூர் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு ராஜாஜி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆனார். அப்போது ராஜாஜியின் கையே ஓங்கியிருந்தது. சத்தியமூர்த்தியை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளினார்.

1938 ஆம் ஆண்டில் சத்தியமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். ராஜாஜி முத்துரங்கமுதலியாரை சத்தியமூர்த்திக்கு எதிராக நிறுத்தி தோற்கடித்தார். அதற்கு அடுத்த ஆண்டும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை தேர்தலில் நிறுத்தி சத்தியமூர்த்தியை தோற்கடித்தார் ராஜாஜி. காமராஜருக்கு ராஜாஜி மேல் இருந்த மதிப்பு குறைந்தது. சத்தியமூர்த்தி நல்ல மனம் படைத்தவர். தாம் தலைவராக வர முடியாவிட்டாலும் தனது நண்பரும் சீடருமான காமராஜர் ஆவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரவேண்டும் என்று காமராஜரை வேட்பாளராக நிறுத்தினார். ராஜாஜி சுப்பையா என்பவரை நிறுத்தினார். கடுமையான போட்டியில் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.

1940 ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜ் பொறுப்பேற்ற பிறகு அவரது அரசியல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களை கேட்காமலேயே இந்தியாவையும் இரண்டாவது உலகப் போரில் ஈடுபடுத்தியது. இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்து போராட்டத்தில் இறங்கியது. காமராஜரும் ஊர் ஊராகச் சென்று யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்திய பாதுகாப்புச் சட்டப்படி காமராஜர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டார். காமராஜர் வேலூர் சிறையில் இருந்தபோது விருதுநகர் நகராட்சி மன்றத்தின் தேர்தலில் போட்டியிட்டு நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானம் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் தேதி பம்பாயில் கூடிய காங்கிரஸ் கமிட்டியில் நிறைவேறியது. செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற உறுதியுடன் அனைவரும் போராட வேண்டும் என்று காந்திஜி கூறினார். இந்த தீர்மானத்தை அறிந்த ஆங்கில அரசு முக்கியமான தலைவர்களையும் தொண்டர்களையும் சிறையில் தள்ளிவிட முடிவு செய்தது. பம்பாயில் இருந்து திரும்பும் தலைவர்களை வழியிலேயே கைது செய்ய திட்டமிட்டது. காமராஜர் இதையறிந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டார்.

ராணிப்பேட்டை க்கு சென்று நண்பர்கள் கல்யாணராமன், ஜனாப்சுலைமான் ஆகியோர் வீட்டில் தங்கியிருந்து, தேசப்பற்று மிகுந்த இளைஞர்களை சந்தித்து போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்று விளக்கினார். பின்னர் காமராஜரும் கல்யாணராமன் வாணியம்பாடி சென்று அங்கிருந்து திருவண்ணாமலை விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்குச் சென்று காங்கிரஸ் தொண்டர்களை ரகசியமாக சந்தித்து போராட்டங்களை விளக்கினார்கள். மதுரையிலிருந்து இருவரும் புரிந்து காமராஜர் விருதுநகர் சென்றார் திருநெல்வேலி வழியாக ஊர் திரும்பிய கல்யாணராமன் ராணிப்பேட்டையில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

விருதுநகர் வந்து சேர்ந்த காமராஜர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். காமராஜர் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார். காமராஜர் சிறையில் இருந்தபோது அவரது குரு அரசியல் வழிகாட்டி தீரர் சத்தியமூர்த்தி காலமானார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த காமராஜருக்கு மிகவும் வரவேற்பு இருந்தது. தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரானார். பின்னர் 1946ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் நான்கும் சேர்ந்து ’சென்னை மாகாணம்’ என வழங்கப்பட்டது.

காமராஜர் சாத்தூர் – அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து எதிர்ப்பே இல்லாமல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் காமராஜரின் ஆதரவாளர்கள். காங்கிரஸ் கட்சியில் காமராஜரின் செல்வாக்கு உயர்ந்து இருந்ததைப் போலவே சட்டமன்றத்திலும் அவருடைய செல்வாக்கு உயர்ந்தது.

தேர்தல் முடிந்தவுடன் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக ஆந்திரகேசரி பிரகாசம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பிறகு ஓ.பி.ராமசாமி என்பவரை முதலமைச்சர் ஆக்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குமாரசாமி ராஜா என்பவரை முதல் அமைச்சர் ஆக்கினார் காமராஜர். இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்குள் மூவரை முதலமைச்சராக செய்யும் அளவிற்கு காமராஜரின் செல்வாக்கு கொடி கட்டி பறந்தது.

புகழோ நாளுக்குநாள் உயர்ந்தது எனினும் காமராஜர் எளிமையாக வாழ்ந்தார். அனைவரிடமும் இனிமையாகப் பழகினார்.கட்சித் தொண்டர்களும் தலைவர்களும் காமராஜரிடம் அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதன்பிறகு காமராஜரின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. அவர் யாரை ஆதரித்தாரோ அவரே முதலமைச்சர் ஆனார். இந்த நிலைமை 1952ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை நீடித்தது. 1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அப்போதும் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். அந்தத் தேர்தலில் காமராஜர் நாடாளுமன்ற தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அமைச்சர்களாக இருப்பவர்கள் சட்டமன்ற உறுப்பினராகவோ மேல் சபை உறுப்பினராகவோ இருக்க வேண்டும். காமராஜர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவர் மேல்சபை உறுப்பினராக நியமனம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யவில்லை காமராஜர். ஏனென்றால் அவர் சிறந்த ஜனநாயகவாதி. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக விரும்பினார். 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வட ஆற்காடு மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. காமராஜர் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜியின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் அனைவரையும் தமது அமைச்சரவையில் இடம் பெறச் செய்தார்.

புதிதாக இரு அமைச்சர்களை நியமித்தார் அவர்களுள் ஒருவர் பரமேஸ்வரன் என்பவர் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவரை இந்து அறநிலை துறை அமைச்சர் ஆக்கினார். காமராஜர். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தையும் துணிச்சலான முடிவையும் மக்கள் பாராட்டினர். காமராஜர் கல்வியறிவு அதிகம் இல்லாதவர் அவரால் முதலமைச்சராக இருந்து திறம்பட அரசு நிர்வாகம் செய்ய முடியுமா என்று பலர் சந்தேகம் கொண்டனர். நிர்வாகத்தில் காமராஜர் தலைசிறந்து விளங்கினார்.

எல்லாக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்று விரும்பினார். இலவச கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். கிராமங்கள்தோறும் புதியக் பள்ளிகள் தொடங்கப்பட்டன. பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பகலுணவு இலவசமாக வழங்கும் திட்டம் வகுத்தார். சீருடையும் இலவசமாக வழங்கினார். 1954-ம் ஆண்டு முதலமைச்சர் ஆனவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தியாகியும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியான திரு கக்கன் அவர்களை தலைவராக தேர்ந்தெடுத்தார். பின்னர் தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு அளித்தார்.

சுதந்திர போராட்ட வீரர்களான பக்தவச்சலம், சி சுப்பிரமணியம், வெங்கட்ராமன் ஆகிய அறிஞர்கள் காமராஜர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். சிறந்த நிர்வாகியான பக்தவச்சலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் சிறந்த கல்வி அமைச்சருமான சுப்பிரமணியம் மத்திய அமைச்சராகவும், மகாராஷ்டிர மாநில ஆளுநராக ஆர். வெங்கட்ராமன் மத்திய அமைச்சராகவும், இந்திய குடியரசு துணைத் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த வரலாற்று நாயகர்கள். இவர்களில் திறமையால் தமிழ்நாடு சிறந்து விளங்கியது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக 1952 ஆம் ஆண்டு காமராஜர் அவர்களின் ஒத்துழைப்போடு ராஜாஜி பொறுப்பேற்றார். தனிப்பெரும்பான்மை இல்லாத சட்டசபையில் காங்கிரஸில் எதிர்க் கட்சிகள் சுயேச்சைகள் ஆதரவுடன் தான் ராஜாஜி முதலமைச்சர் பொறுப்பேற்றார். ராஜாஜி தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த போதும் காமராஜர் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நிதியில் தேனாம்பேட்டையில் பெரிய திடலையும் ராயப்பேட்டையில் சத்தியமூர்த்தி பவன் மாளிகையையும் வாங்கிய பெருமை இவரைச் சாரும்.

ராஜாஜி சிறந்த அறிஞர் அரசு நிர்வாகத்தை நடத்துவதில் வல்லவர். முதலமைச்சர் ஆனதும் சிறந்த சில திட்டங்களை அறிவித்து மக்களின் பாராட்டுகளைப் பெற்றார். அத்தகையவர் புதிய கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். திட்டப்படி ஒரு பாதி பள்ளி குழந்தைகள் காலையில் மட்டுமே பள்ளிக்கு செல்ல வேண்டும் மறுபாதி குழந்தைகள் மாலையில் மட்டுமே பள்ளிக்கு சென்றால் போதும். மீதி நேரத்தில் தன் குடும்பதொழிலை கற்க வேண்டும் என்றார். இது, குலக்கல்வி திட்டம் என விமர்சிக்கப்பட்டது. அந்தக் கல்வி திட்டத்தை அனைவரும் எதிர்த்தனர். ஆனால் ராஜாஜியை அந்த கல்வித் திட்டத்தை கைவிட மறுத்தார்.

ராஜாஜி முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சித்த வேளையில் ராஜாஜி தாமாகவே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பொறுப்பை காமராஜரை ஏற்க வேண்டும் என்று அனைவரும் விரும்பினர். இந்தியாவின் பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு கோவிந்த வல்லப பந்த் போன்றவர்களும் காமராஜரை முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். கட்சிக்காரர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் எந்தவித சலுகைகளையும் கேட்டு என்னிடம் வரக்கூடாது அதற்கு சம்மதித்தால் நான் முதலமைச்சர் பதவியை இழக்க தயார் என்பது தலையை வைத்தார் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று மிகவும் எளிய விழாவில் காமராஜர் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1953 ஆம் ஆண்டிலேயே ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் பிரிந்து போய்விட்டதால் காமராஜர் முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்..கண்டிப்பும் நேர்மையும் உள்ள முதல்-அமைச்சர் என்று எல்லோராலும் பாராட்டப் பெற்றார்.

1963 ஆம் ஆண்டில் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார். 1964ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரிஸ்ஸாவில் புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஜனநாயக சோசலிச காங்கிரஸ் கட்சியின் கொள்கையை அறிவித்தார். பாரத பெருந்தலைவராக இந்திய மக்களால் போற்றப்பட்டார் காமராஜர். 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறைந்தார். நேருவுக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்தது எளிமையான மனிதர் திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்களை பாரத நாட்டின் பிரதமர் ஆக்கினார் காமராஜர். 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லால்பகதூர் சாஸ்திரி இறந்தார்.

யாரை பிரதமராக நியமிக்க போகிறார் காமராஜர் என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் திருமதி இந்திரா காந்தி அம்மையாரை இந்தியாவின் பிரதமர் ஆக்கினார். 1966 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோவியத் நாட்டுக்குச் சென்றார் காமராஜர். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லோவேகியா, யூகோஸ்லேவியா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கும் சென்றார்.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.தோல்வியை கண்டு துவளாது பொது மக்களுக்குத் தொண்டு புரியலானார். திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று அமைச்சரவையை அமைத்தது. பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

பொதுத் தேர்தலுக்குப் பிறகு, நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் போட்டியிட்டு காமராஜர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் இந்தியா முழுவதும் பூரண நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். தேசிய தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். காமராஜ் அவர்களையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அந்த உத்தரவிற்கு ஒப்படைக்க மறுத்துவிட்டார்.

காமராஜருக்கு உறுதுணையாக இருந்தார்.இந்தியாவின் ஜனநாயக அமைப்பு கொடுக்கப்பட்டது கண்டு காமராஜர் மனம் வருந்தினார். 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள், அண்ணல் காந்தி பிறந்தநாள். அண்ணன் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தன்னைப் பார்க்க வந்தவர்களை எல்லாம் சந்தித்து மகிழ்ச்சியோடு அனுப்பிவிட்டு, மதிய உணவுக்குப் பிறகு சிறிது ஓய்வு எடுக்கச் சென்றார் காமராஜர். அப்போது ஏற்பட்ட மாரடைப்பால் காமராஜர் காலமானார்.

அண்ணல் காந்தியடிகளின் உண்மை தொண்டனாக, ஏழை எளியவர்களின் நண்பனாக, ஜனநாயகன் காவலனாக, தூய தலைவனாக,நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டு காலம் சிறையில் வாடிய தியாகச் செம்மலாக, காலா காந்தி (கருப்பு காந்தி) என்று பாரத மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட, கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர், காந்தி பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தியடிகளோடு ஐக்கியமானார்.

காமராஜரின் பொன்னுடல் மறைந்தாலும், அவர் மேற்கொண்ட தியாகங்கள், இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத வகையில் ஆழப்பதிந்து, மாணிக்கவரிகளாக சுடர் ஒளிவிட்டு பிரகாசிக்கின்றன.. காமராஜர் என்னும் அந்தத் தியாகப் பொன் மலரை வணங்கி மகிழ்வோம்! இந்தியாவின் சுதந்திர பொன்விழா கொண்டாடும் பொன்னான தருணத்தில்.

நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here