’’மூச்சு திணறலுடன் மாடியிலிருந்து இறங்கி வந்துதான் சாப்பாடு வாங்க வேண்டுமாம்’’- தூத்துக்குடி கொரோனா வார்டில் நோயாளிகள்

0
113
thoothukudi gh

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு நடுவே மருத்துவர்களின் சேவை மகத்தானது. அவர்களை பாராட்டுவதோடு வணங்க வேண்டும். அந்த அளவிற்குதான் மருத்துவர்களை மக்கள் மதித்து வருகிறார்கள். கொரோனா விவகாரத்தில் மருத்துத்துறை, சுகாதாரத்துறை, காவல்த்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறையின் பணி போற்றுதலுக்கு உரியதாக இருக்கிறது. அரசின் அணுகு முறையும் ஆறுதலாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் சிலர், வருத்தத்தில் இருக்கிறார்கள். அதற்கு முதல் காரணம் சாப்பாடுதான். காலை ,மதியம்,இரவு என சாப்பாடு வழங்குகிறார்கள். வார்டின் முகப்பில் வைக்கப்படும் சாப்பாட்டினை வார்டில் உள்ளவர்கள் சென்று எடுத்து சாப்பிட வேண்டும். அப்படி எடுத்து சாப்பிட வேண்டும் என்கிறபோது, மேல் மாடியில் உள்ளவர்களும் கீழே இறங்கி வந்து சாப்பாட்டை எடுத்து செல்ல வேண்டியது இருக்கிறதாம்.

சமூக இடைவெளி நடவடிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட சில இடத்தில் மட்டும் சாப்பாட்டை வைக்கும் பழக்கம் நல்லதாக கூட இருக்கலாம். ஆனால் அப்படி வைக்கிறபோது அது எல்லோருக்கும் போய் சென்றடைகிறதா ? என்பதை கண்காணிப்பது நிர்வாகத்தின் கடமையாகும். வைக்கப்படும் சாப்பாடு மேலிருந்து கீழ் இறங்கி வரும் முன் சில நேரங்களில் காலியாகிவிடுகிறதாம். சில நோயாளிகள் சில நேரங்களில் சாப்பிட முடியாமல் போய்விடுகிறது என்கிறார்கள்.

மூச்சு திணறல் ஏற்பட்டு அதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியை மேல் மாடியிலிருந்து படிக்கட்டு மூலம் கீழே சென்று சாப்பாடு வாங்கி கொள்ளும்படி சொல்வது சரியான நடவடிக்கையாக இருக்க முடியாது.

அதுபோல் அனுமதிக்கப்பட்டவர்தான் சாப்பாட்டை எடுத்து சாப்பிட வேண்டும் என்றால் அவர் ஆக்ஸிஷன் உதவியை நாடுபவராக இருந்தால் அவரால் எப்படி சாப்பாட்டை எடுத்து சாப்பிட முடியும்? வார்டில் அனுமதிக்கப்பட்டவர் அனைவரும் தானாக சாப்பாட்டை எடுத்து சாப்பிடும் தருவாயில் இருக்கிறார்களா என்பதை முதலில் நிர்வாகம் கவனிக்க வேண்டும். முடியாதவர்களுக்கு உதவ அதற்கென ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் சிலர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக நோயாளிகளிடமும் அதிக இடை வெளியை கடைபிடித்தால், அவர்களுக்கு பசி மட்டுமல்ல மன அழுத்தமும் போகாதுதானே?.

எனவே இதை குறையாக எடுத்துக் கொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும். அடுத்தவர்களுக்கும் பாதிக்க கூடாது என்பதற்காகத்தானே அரசு கஷ்டப்பட்டு வீடுதோறும் சென்று மக்களை சோதித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்புகிறது. ஆஸ்பத்திரியில் உரிய வசதியில்லை என்றால் அரசின் முயற்சி வேஸ்டாகும்தானே ?

அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் மருத்துவ, சுகாதார பணியாளர்களை குறை சொல்வது எமது நோக்கம் அல்ல. மேலும் இதுபோன்று தவறு நடக்க கூடாது. அதை சரிசெய்ய வேண்டும் என்பதே எமது நோக்கம். இதற்கு அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்க விரும்பினால், அதனையும் இணைத்து வெளியிட தயாராக இருக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here