நாசரேத்,நவ.23:திருச்சியில் நடைபெற்ற 65 வயது மேற்பட்டோருக்கான தமிழ்நாடு அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில் நாசரேத் பொன்ராஜ் சாதனை படைத் துள்ளார்.
கடந்த 16, மற்றும் 17 ஆம் தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற 65 வயது மேற்பட்டோருக்கான தமிழ்நாடு அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில்,100 மீ ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3வது இடமும் நாசரேத்தைச் சேர்ந்த செ.பொன்ராஜ் பெற்று வருகிற 9-02-2020 அன்று மணிப்பூரில் நடைபெற இருக்கிற அகில இந்திய தடகளப்போட்டியிலும் பங்கேற்க இருக்கிறார்.
இவர் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரர். 1979-1985 களில், தக்கலை,திண்டுக்கல்,சிவந்திபுரம்,அதிராம்பட்டணம்,நாசரேத்,,நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களில் நடைபெற்ற தென்னிந்திய அளவு எழுவர் கால்பந்தாட்டப்போட்டிகளில் வெற்றிக்கோப்பை பெற்ற நாசரேத் மர்காசியஸ் கால்பந்து அணியின் முன்வரிசை வலப்புறவீரராக அங்கம் வகித்தவர்.
முன்னதாக,1979 இல் சாத்தூரில் நடைபெற்ற பதினொரு பேர் ஆடுகிற மாநில அளவு கால்பந்தாட்டப் போட்டியில், வெற்றிக் கோப்பையை தட்டிவந்த நாசரேத்து மர்காசியஸ் கால்பந்து அணியின் முண்ணனி வீரர் ஆவார்.நாசரேத்து கால்பந்து ரசிகர்களால் ”பறக்கும் தட்டு” பொன்ராஜ் என அழைக்கப்பட்டவர்.இவர் நாசரேத் நகர கூட்டுறவு வங்கியில் பணியாற்றி, துணைப் பொது மேலாளராக ஓய்வு பெற்றவர்.