ஸ்ரீவைகுண்டத்தில் பெண்களுக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

0
226
srivaikundam

ஸ்ரீவைகுண்டத்தில் பெண்களுக்கு பனைஓலை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது.

தற்போது பாலிதீன், கேரி பேக்குகளுக்கு மாற்றாக காகிதப்பைகள், துணிப்பைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப பனைஓலையினால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கும் மவுசு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நலிவடைந்துவரும் பனைத்தொழிலை ஊக்குவிக்கவும், பனைத்தொழிலாளர்கள் மற்றும் வீடுகளிலுள்ள பெண்கள் வேலைவாய்ப்பினை பெற்றிடும் பொருட்டு நவதிருப்பதி ‘சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை’ சார்பில் பனைஓலை பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி ஸ்ரீவைகுண்டம் கணியான் காலனியில் நேற்று நடந்த பனை ஓலை தயாரிப்பு பொருட்கள் பயிற்சி முகாமிற்கு, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். சமுதாய வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம், பூர்ணிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம வளர்ச்சி அலுவலர் சந்திரியா வரவேற்றார்.

முகாமில், பனைஓலை பொருட்களை செய்வதில் வல்லவரான கருங்குளம் பால்பாண்டி கலந்துகொண்டு பெண்களுக்கு பனைஓலையில் பெட்டிகள், பாக்ஸ் வடிவ பெட்டிகள், கூடை, பாய் மற்றும் பலவகையான அலங்கார பொருட்கள் தயாரிப்பது குறித்து செயல்விளக்க முறைகளுடன் விரிவாக பயிற்சி அளித்தார்.

இதில், டி.வி.எஸ்.அறக்கட்டளையினர், மக்கள் நலச்சங்க தலைவர் பிச்சைக்கண்ணன், செயலாளர் கந்தசாமி, நிர்வாகிகள் கருத்தப்பாண்டி, தங்கபாண்டி, கல்யாணராமன் மற்றும் பெண்கள், மகளிர் குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கிராம வளர்ச்சி அலுவலர் செல்வி நன்றி கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாயிகளுக்கு ‘உழவர் வயல்வெளி பயிற்சி முகாம் நடந்தது’

ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மைத்துறையின் நீர்வள நிலவள திட்டத்தின் சார்பில் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கீழ்பிடாகை வரதராஜபுரம் பகுதி விவசாயிகளுக்கான ‘உழவர் வயல்வெளி பயிற்சி பள்ளி முகாம்’ நடைபெற்றது. முகாமிற்கு, வேளாண்மை உதவி இயக்குநர் ஊமைத்துரை தலைமை வகித்தார். ‘உழவர் நண்பர்’ விவசாயி கண்ணன் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் அபர்ணா வரவேற்றார்.

முகாமில், பங்கேற்ற நெல் சாகுபடி விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ஊமைத்துரை, தற்போதைய பிசான நெல் சாகுபடிக்கான உயர் தொழில்நுட்ப முறைகள், நெல்விதைகளை தேர்வு செய்யும்முறை, விதை நேர்த்தி, நாற்றங்கால் அமைத்தல், அடி உரம் இடுதல், சாகுபடியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள், பயிர் பாதுகாப்பு, அறுவடை தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்க முறைகளுடன் விரிவாக எடுத்துரைத்தார்.

இதில், பாசன விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், மகளிர் குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here