சாத்தான்குளம் மகேந்திரன் மரண வழக்கு விசாரணையில் சிபிசிஐடி – மகேந்திரனின் சகோதரி வீட்டில் நடக்கிறது

0
260
cbcid

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்குளம் ஊரை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் மகேந்திரன்(28). திருமணம் ஆகாதவர். கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். இவரது உடன் பிறந்தவர் துரை(35). அப்பகுதியில் ஜெயக்குமார் என்பவர் கொலை செய்யப்பட வழக்கில் துரை தேடப்பட்டார். இவரை தேடி வந்த போலீஸார், துரை இருக்கும் இடத்தை காட்ட சொல்லி அவருடை தம்பியான மகேந்திரனை அழைத்து சென்றிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் மகேந்திரன் இருப்பதை அறிந்த துரை ஆஜர் ஆகியிருக்கிறார். அதன் பிறகு போலீஸ், மகேந்திரனை விட்டிருக்கிறது.

போலீஸ் ஸ்டேனிலிருந்து வெளியே வந்த சில நாட்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் சிகிச்சை பலனளிக்காமல் மகேந்திரன் இறந்துபோக, வேறு வழியில்லாமல் மகேந்திரன் உடலை வாங்கி சொந்த ஊரில் இறுதி சடங்கை நடத்தி முடித்தனர்.

இதற்கிடையே சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இந்த விவகாரம் பெரிய அளவில் விஸ்பரூபம் எடுத்தது. இந்தநிலையில் ஏற்கனவே அதே காவல்நிலையத்திற்கு சென்று வந்த மகேந்திரன் இறப்பிலும் சந்தேகம் கிளம்பியது.

இது குறித்து மகேந்திரனின் தாயார் வடிவு அம்மாள் சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி மகேந்திரன் இறப்பு குறித்து சிபிசிஐடி விசாரிக்கிறது. அதற்கான வேலையை சிபிசிஐடி தொடங்கி இருக்கிறது. மகேந்திரனின் சகோதரி வீடு தூத்துக்குடி கே.வி.கே நகரில் உள்ளது. தற்போது அங்கு சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி அனில்குமார் தலைமையில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here