இன்று அக்காளிடம் விசாரணை நாளை தாயாரிடம் விசாரணை – பேய்குளம் மகேந்திரன் மரண வழக்கில் சிபிசிஐடி

0
72
mahendran news

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்குளம் ஊரை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் மகேந்திரன்(28). திருமணம் ஆகாதவர். கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். இவரது உடன் பிறந்தவர் துரை(35). அப்பகுதியில் ஜெயக்குமார் என்வவர் கொலை செய்யப்பட வழக்கில் துரை தேடப்பட்டார். இவரை தேடி வந்த போலீஸார், துரை இருக்கும் இடத்தை காட்ட சொல்லி அவருடை தம்பியான மகேந்திரனை அழைத்து சென்றிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் மகேந்திரன் இருப்பதை அறிந்த துரை ஆஜர் ஆகியிருக்கிறார். அதன் பிறகு போலீஸ், மகேந்திரனை விட்டிருக்கிறது.

போலீஸ் ஸ்டேனிலிருந்து வெளியே வந்த சில நாட்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு நாட்களில் சிகிச்சை பலனளிக்காமல் மகேந்திரன் இறந்துபோக, வேறு வழியில்லாமல் மகேந்திரன் உடலை வாங்கி சொந்த ஊரில் உறவினர்கள் இறுதி சடங்கை நடத்திவிட்டனர். போலீஸ் விசாரணையை தொடர்ந்து மகேந்திரன் இறந்துபோனார். எனவே அவருடைய இறப்பில் சந்தேகம் இருக்கிறது என கேட்க தைரியம் இல்லாதநிலையில் தவித்துக் கொண்டிருந்தனர் அவரது உறவினர்கள்.

இந்தநிலையில்தான் அதே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்ட வியாபாரிகள் ஜெயாராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த சம்பவம் ஐ.நா வரை பேசப்பட்டுவிட்டது. இந்த வழக்கை தற்போது சிபிஐவிசாரித்து வருகிறது.

இதற்கிடையே மகேந்திரன் மரண விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. வழக்கறிஞர்கள் ஐசக்மோதிலால், ஜெயச்சந்திரன் மற்றும் ராமசாமி ஆகியோர் மகேந்திரனின் தாயார் வடிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 8-ம் தேதி மனு செய்தனர். அந்த மனுவில் மகேந்திரன் மரணம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மகேந்திரன் தாயாருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மகேந்திரன் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 21-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசுக்கு நோட்டீஸ் அளித்தது. இந்தநிலையில் அந்த வழக்கு இன்று 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதியின் கேள்விக்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், மகேந்திரன் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்க இருக்கிறது என்று பதில் அளித்தார்.

இந்தநிலையில் இன்று தூத்துக்குடி கே.வி.கே நகரில் உள்ள மகேந்திரனின் சகோதரி சந்தனமாரி வீட்டிற்கு சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி அனில்குமார் தலைமையில் அதிகாரிகள் சென்றனர். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் நாளை மகேந்திரனின் தாயார் வடிவு அம்மாளிடம் விசாரணை செய்ய இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here