பாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்

0
586
papanasam

கைகொடுக்கும் கார்சாகுபடி பொய்த்து போனதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பிசான சாகுபடியாவது கைகொடுக்குமா என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாச அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை நெல்லை மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் முதல் சாகுபடியாக நடக்கும் கார் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி பாபநாசம் அணை திறக்கப்பட்டு,தண்ணீர் திறந்துவிடப்படும். தொடர்ந்து கார்சாகுபடிக்கான பணிகள் படிப்படியாக தொடர்ந்து நடக்கும். செப்டம்பர் மாதம் அறுவடைக்கு நெல் தயாராகும். தற்போது அதில் எதுவுமே நடக்க வில்லை. மழை பொய்த்து போனதால் அணையி நீர் இருப்பு குறைந்துபோயிவிட்டது.

மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில், மார்ச்,ஏப்ரல்,மே ஆகிய கோடை மாதங்களுக்கு பின் ஜூன் மாதத்தில் குறைந்தது 60 அடி தண்ணீராவது இருந்தால்தான் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முடியும். ஆனால் தற்போது அணையின் நீர்மட்டும் 60 அடி கூட இல்லை. இதனால் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாமல் போனது.

நேற்றைய (24.07.2020) நிலவரப்படி 52.20 அடியாக மட்டுமே நீர்மட்டம் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 433.91 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 454.75 கன அடி நீர் வெளியேறியது. சேர்வலாறு நீர்மட்டம் 64.76 அடியாக இருந்தது.

தற்போது காரையார் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்ய வில்லை. அதனால் பாபநாசம் அணையில் நீர்மட்டம் உயரவில்லை. மலைப்பகுதியில் ஆடி அமாவாசை தினமான 20ம் தேதி ஓரளவு மழைபெய்தது. அதன் பிறகு நேற்றுதான் சிறிது சாரல் மழை தென்பட்டது.

பிசான சாகுபடி பணிகள் ஆண்டு தோறும் அக்டோபரில் தொடங்குவது வழக்கம். அதற்கு இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பிருக்கிறது. எனவே பிசான சாகுபடிக்கு பிரச்னை இருக்காது என எதிர்பார்க்கலாம். பிசான சாகுபடியை பொறுத்தவரை பருவநிலை காரணமாக பயிர்களில் சில நோய் தொற்று ஏற்படுவது வழக்கம். அதனாலேயே விவசாயிகள் கார் சாகுபடியை விரும்புவார்கள்.

இவ்வாண்டு கார் சாகுபடிக்கு வாய்ப்பில்லாமல் போனது. நிச்சயமாக பிசான சாகுபடியை மட்டுமே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கொரோனா கொடூரத்துக்கு நடுவே விவசாயிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here