கொரோனா வைரஸின் கொடூரத்திலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதுவரைக்கும் இடைவெளி மட்டுமே மருந்து என மருத்து வல்லுநர்களின் ஆலோசனையின் படி சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.
மார்ச்லிருந்து இதுவரை பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தளர்வுடன் கூடிய ஊரடங்கிற்கு நடுவே ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் முழு ஊரடங்காக செயல்படுத்தி வருகிறது அரசு. நோய்க் கொடுமைக்கு நடுவே பொதுமக்களின் வாழ்வாதார பிரச்னை இருப்பதால் அவ்வப்போது ஊரடங்கை இறுக்குவதும் தளர்த்துவதுமாக அரசு அறிவித்து வருகிறது.
அந்த வகையில் இம்மாத தொடக்கத்தில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கபட்டது. அதன்படி நான்காவது வார ஞாயிற்றுகிழமை இன்றோடு முடிகிறது. ஊரடங்கின் போது அதையும் மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு போலீஸார் சற்று மென்மை போக்கை கடைபிடிக்கிறார்கள். அதிரடி அடிதடிகளை விரும்பவில்லை. அதுபோல் அடாவடியாக சுற்றுவோர்களும் போலீஸாரோடு மல்லுகட்டுவோரும் இப்போது இல்லை.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தகவலை அறியும் மக்கள் தானாகவே முடங்கி கொள்ளும் மனநிலைக்கு வந்திருப்பதையும் பார்க்க முடிகிறது எதையும் பொருட்படுத்தாமல் சுற்றி திரிபவர்களையும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. கூட்டி கழிச்சு பார்க்கும்போது, ஊரடங்கை மதிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே மக்களின் ஒத்துழைப்பும், அரசு நிர்வாத்தின் பெரும்முயற்சியும் வெற்றி பெற செய்யும் என்பதை அறிய முடிகிறது.