அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் நேரத்தில் பக்தர்கள் அனைவரும் ‘ராம பாராயணம், ராம நாமம்’ சொல்லி சிறப்பு வழிபாடு செய்திடுமாறு தூத்துக்குடி ஸ்ரீசித்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆன்மிக பூமியான நமது இந்தியத் திருநாட்டில் அனைத்து மக்களும் ஜாதி, மத, இன பேதமின்றி அன்பு நிறைந்த சகோதரர்களாக ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர்.
பாபர் மசூதி, ராமஜென்மபூமி நில வழக்கில், கடந்த நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் அனைவரும் மகிழ்வுடன் ஏற்றிடும் வகையில் அருமையான தீர்ப்பு வழங்கியது. அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டி கொள்ளலாம் என்றும், இதற்காக 3மாத காலத்திற்குள் அதற்கான அறக்கட்டளையை நிறுவவேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தது.
அனைத்து மதத்தினராலும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த அருமையான தீர்ப்பினைத்தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுவதற்கு, ‘அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளையை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அமைத்தது.
இதன்மூலமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முதல்கட்ட பணிகள், கடந்த மார்ச் மாதம் முதல் துவங்கி நடந்து வருகிறது. சர்ச்சை ஏற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த தற்காலிக ராமர் கோவில் வேறு இடத்திற்க்கு மாற்றப்பட்டு, புதிய ராமர் கோவில் கட்டுமான பணிகளை துவங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 5ம் தேதி அறக்கட்டளை சார்பில் நடைபெறுகிறது. இவ்விழாவில், பாரதப்பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநில முதல்வர்கள், அனைத்துமத ஆன்மிக அன்பர்கள் பங்கேற்க உள்ளனர்.
வரும் 5ம் தேதி(புதன்கிழமை) காலை 11மணி முதல் மதியம் 1மணிக்குள் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த அருமையான நேரத்தில் பக்தர்கள் அனைவரும் தங்களது எண்ணங்கள் யாவும் ஈடேறி மகிழ்ந்திடும் பொருட்டு தங்களது வீடுகளில் அமர்ந்து ‘ராம பாராயணம், ராம நவமி’யை பாடி சிறப்பு வழிபாடுகளை செய்திடவேண்டும்.
உலகையே ஆட்டுவித்துவரும் கொரோனா வைரஸ் பரவலால் உலக மக்கள் அனைவரும் மிக கடுமையான சூழலில் சிக்கித் பரிதவித்து வருகின்றனர். இதுபோன்ற இக்கட்டான சூழலில் இருந்து அனைவரும் விடுபடவும், நோய்கள் இன்றி நலமாக வாழ்ந்திடவும், வாழ்வின் கஷ்டமான சூழல்களிலிருந்து விடுபடவும் ஏதுவாக 5ம்தேதி அன்று குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் ராம நாமத்தை சொல்லி பூஜை வழிபாடு செய்து, துன்பங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ந்திடுவோம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.