”பொருளாதார இழப்பினை சரி செய்ய வங்கிகள் உடனே கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய வேண்டும்” – கலெக்டர் வேண்டுகோள்

0
32
collector

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் வங்கியாளர்கள் கூட்டம் மற்றும் விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று (29.07.2020) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பேசினார். ’’தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கியாளர்கள் கூட்டம் கோவிட் 19 காரணமாக கடந்த 4 மாதங்களாக நடத்தப்படாமல் இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் பொருளாதாரத்தை விரைந்து உயர்த்தும் வகையில் பொருளாதார நடவடிக்கைகளை 2 மடங்காக உயர்த்திட துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், முதலமைச்சர் இதுதொடர்பாக மாநில அளவிலான பல்வேறு கூட்டங்களை நடத்தி உள்ளார்கள். மாநில அளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், மாவட்ட அளவில் கீழ்மட்டத்தில் துரிதமாக செயல்பட வேண்டும்.

கடந்த ஆண்டு கடன் திட்ட அறிக்கையில் ரூ.9,654.39 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.11,325. 83 கோடி எய்தப்பட்டது. இது 117 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு ரூ.12,084 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண்மைக்கு ரூ.5,007 கோடியும், தொழிற்கடன் ரூ.2,017 கோடியும், முன்னுரிமை செக்டார் கடன் ரூ.7,927 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கியாளர்கள் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அதிக அளவிலான விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலனை மேற்கொண்டு குறியீட்டினை விட அதிக அளவு இலக்கினை எய்திட வேண்டும.

அனைத்து வங்கிகளும் தங்களுக்கு வரும் கடன் விண்ணப்பங்களின் மீது உடனுக்குடன் முடிவெடுத்து பொருளாதார நடவடிக்கைகளை விரைவுப்படுத்திட வேண்டும். தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மீண்டு வந்தால்தான் பொருளாதார இழப்பீடுகளை சரிசெய்திட முடியும். இன்னும் 3 அல்லது 4 மாத காலத்திற்குள் குறியீட்டு இலக்கினை முடிக்க வேண்டும். கடன் வழங்கப்பட்ட ஒரு வார காலத்திற்குள் மானியங்கள் வங்கிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நபார்டு மூலம் அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஆவணங்களை டிஜிட்டல் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வங்கியாளர்கள் பார்க்கும் வகையில் இ சக்தி திட்டம் நாகப்பட்டிணம், விருதுநகர், நாமக்கல் மாவட்டங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தூத்துக்குடி மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு விபரங்களை வங்கிகள் உடனுக்குடன் அறிந்துகொண்டு கடன் உதவிகளை வழங்க முடியும். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடியில் பனைத்தொழில் மற்றும் ஆழ்வார்திருநகரில் வாழை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டமைப்பு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த 2 நிறுவனங்களுக்கும் தலா ரூ.33 லட்சம் மானியம் வழங்கப்படும். இந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டால் 3 ஆண்டுகளில் தலா ரூ.2 கோடி கடன் உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் மற்றும் அலுவலர்கள் விரைந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், முன்னோடி வங்கி துணை மேலாளர் விஜயகுமார் மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பாலசுப்பிரமணியன், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் பிரேமா மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here