சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐக்கள் மீது மேலும் மேலும் புகார்கள் – மாவட்ட எஸ்.பி விசாரணை !

0
162
sathankulam

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் குறித்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் புகார் தெரிவித்தவர்களிடம் இன்று(30.07.2020)விசாரணை நடந்தது. அப்போது அதிகாரிகள் மீது மேலும் ஒருவர் புகார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு நேரத்தில் கடை அடைப்பதில் தாமதம் ஏற்பட்டது குறித்து கடந்த ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர். விசாரணைக்கு பின் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருவோரே கொலை செய்தனர் என்று குற்றசாட்டு கிளம்பியது.

இந்த சம்பவம் பெரிய அளவில் விஸ்பரூபம் எடுத்தது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்காக ஐ.நாவே கண்டனம் தெரிவித்தது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட பத்துபேர் கொலை வழக்கில் சிறைக்கு சென்றனர். இது குறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இதற்கிடையே அதே காவல்நிலையத்தில் இரண்டு நாட்கள் விசாரணைக்கு சென்று திரும்பிய பேய்க்குளம் மகேந்திரன் என்பவர் இறந்த சம்பவமும் விஸ்பரூபம் எடுக்க தொடங்கியது. மகேந்திரன் ஜூன் 13ம்தேதி இறந்தார். இந்த சம்பவம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் இறப்பு சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முந்தையது. என்றாலும் மகேந்திரனின் குடும்பத்தார், ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பு சம்பவம் நடக்கும் வரையில் போலீஸ் குறித்து புகார் எதுவும் கொடுக்க வில்லை. புகார் கொடுக்க தைரியம் இல்லாமல் இருந்ததாக சொன்னார்கள். அதன் பிறகே புகார் கொடுக்க முன்வந்தனர். மகேந்திரன் இறப்பு குறித்தும் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை வைத்தனர்.

சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்குளம் ஊரை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் மகேந்திரன்(28). திருமணம் ஆகாதவர். கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். இவரது உடன் பிறந்தவர் துரை(35). அப்பகுதியில் ஜெயக்குமார் என்பவர் கொலை செய்யப்பட வழக்கில் துரை தேடப்பட்டார்.

துரையை தேடி வந்த போலீஸார், துரை இருக்கும் இடத்தை காட்ட சொல்லி அவருடை தம்பியான மகேந்திரனை அழைத்து சென்றனர். உறவினர்கள் வீடுதோறும் தேடியிருக்கிறார்கள். நாங்குநேரில் உள்ள துரையின் மாமனார் தங்கவேல் வீட்டிற்கும் சென்றிருக்கிறார்கள். அங்கும் துரை இல்லை என்பதை அறிந்த போலீஸார், அங்கிருந்த தங்கவேல்யையும் உடன் அழைத்துக் கொண்டு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் மகேந்திரன் இருப்பதை அறிந்த துரை ஆஜர் ஆகியிருக்கிறார். அதன் பிறகு போலீஸ், மகேந்திரனை விட்டிருக்கிறது.

போலீஸ் ஸ்டேனிலிருந்து வெளியே வந்த சில நாட்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் மகேந்திரன். அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு நாட்களில் சிகிச்சை பலனளிக்காமல் மகேந்திரன் இறந்துபோக, வேறு வழியில்லாமல் மகேந்திரன் உடலை வாங்கி சொந்த ஊரில் உறவினர்கள் இறுதி சடங்கை நடத்திவிட்டனர். இதற்குபிறகுதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இறப்பு சம்பவமும் நடந்தது.

மகேந்திரன் இறப்பு குறித்து ஐசக்மோதிலால், ஜெயச்சந்திரன், ராமசாமி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் துணையுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் மகேந்திரனின் தாயார் வடிவு அம்மாள். நீதிமன்ற நெருக்கடிக்கு பிறகு இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. சிபிசிஐடி அதிகாரிகள், மகேந்திரன் குறித்து உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் சாத்தான்குளம் அருகே மீரான்குளம் ஊரை சேர்ந்த பனையேறும் தொழிலாளி யாக்கோப்பு ராஜ் என்பவர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், ஐயா நான் எங்கள் ஊரில் பனையேறும் தொழில் செய்து வருகிறேன் 23 5 2020 அன்று மாலை 7 மணி அளவில் மீரான்குளம் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டு இருந்த போது அங்கு வந்த ரகுகணேஷ் என்கிற எஸ்ஐ, எனது சட்டையை பிடித்து இழுத்து நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்தார்.

என்னை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். தரதரவென இழுத்து சென்று காரில் ஏற்றினார். பலனியப்பாபுரம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று என் கண்களை துண்டால் கட்டி நிர்வாணப்படுத்தி லத்தியால் அடித்தார். அவருடன் மேலும் சிலரும் சேர்ந்து என்னை சூழ்ந்து நின்று கை, கால், உடம்பு முழுவதும் அடித்தனர். குறிப்பாக என் பின் பகுதியை குறிவைத்து தாக்கினர். அதில் ரத்தகாயப்படுத்தினர்.

பிறகு இரவு 10 மணி அளவில் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஆய்வாளர் ஸ்ரீதர் முன்னிலையில் என்னை மீண்டும் நிர்வாணப்படுத்தி எஸ்.ஐ,ரகுகணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதரிடம், ’சார் இவனை காட்டுப்பகுதியில் வைத்து பின்பகுதியை பழுக்க வைத்துவிட்டோம். மேலும் உங்கள் முன்னிலையில் அடிக்க வேண்டுமா எனவும் கேட்டார். அதற்கு ஆய்வாளர் நீ கொடுத்த அடி காணாது. மேலும் எனது முன்னிலையில் அடி என கூறியவுடன் இரண்டுபேர் எனது கையை சுவரில் பிடித்து கொண்டு எனது பின்பகுதியில் சரமாரியாக தாக்கினர். நிர்வாணமாக இருந்த நான் வலியால் துடித்து மயங்கி விட்டேன்.

பிறகு 24 5 2020 அன்று காலையில் உன்னை வெளியே விட வேண்டும் என்றால் எவ்வளவு பணம் தருவாய் என கேட்டனர். நான் பனையேறும் தொழில் செய்து வருகிறேன் என்னிடம் பணம் இல்லை என்று கூறினேன். உடனே எஸ்.ஐ இரும்பு கம்பியை கொண்டு வந்து என்னை தாக்கினார். ஆய்வாளர் எஸ்.ஐயிடம், ’இவனின் பின் பகுதியை பழுக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்பு எனக்கூறி கொண்டே கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதன்பிறகு என் மீது பொய் வழக்கு பதிவு செய்தனர்.

பேய்க்குளம் மகேந்திரன் என்பவரிடம் நான் 500 ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் அவரது உறவினர் தங்கவேல் அங்கே வந்ததுவிட்டதால் நான் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் பொய்யாக வழக்கு பதிவு செய்து என்னை சிறைக்கு அனுப்பி வைத்துவிட்டனர். மகேந்திரனும் தங்கவேல்யும் யார் என்றே எனக்கு தெரியாது. அவர்கள் என்மீது புகார் கூறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு போலியானது. எனவே அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய எஸ்.ஐக்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என் மீதான போலி வழக்கை ரத்து செய்ய வேண்டும் ’’ என்று கேட்டிருந்தார். அவர் கொடுத்த மனுவிற்கு இன்று(30.07.2020) மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் விசாரணை நடந்தது.

இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு இறந்து போன மகேந்திரனின் உறவினரான தங்கவேல் வந்தார். அவர் மாவட்ட எஸ்.பியிடம் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், ‘’நான் நாங்குநேரியில் வசித்து வருகிறேன். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறேன். 23 5 2020 அன்று அதிகாலை 3:00 மணி அளவில் சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் மற்றும் சீருடை அணியாத நான்கு காவலர்கள் எனது வீட்டு கதவை உடைத்து அத்துமீறி எனது வீட்டிற்குள் நுழைந்தனர். உன் மருமகன் துரை எங்கே எனக் கேட்டனர். வீட்டில் உள்ள நான்கு செல்போன்களை எடுத்துக் கொண்டு என்னையும் பிடித்து இழுத்து நம்பர் பிளேட் இல்லாத தனியார் காரில் ஏற்றினர்.

அப்போது காருக்குள் மகேந்திரன் இருந்தார். சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.பிறகு காலை 10 மணிக்கு மகேந்திரனை மாடிக்கு கொண்டு சென்றனர். பிறகு ஒரு மணி நேரம் கழித்து வந்த மகேந்திரன் சோர்வாக இருந்தார். அதன் பிறகு அன்று இரவு முழுவதும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்தோம். அன்று இரவு காவல் நிலையத்தில் உள்ள செல்லில் எனது அருகில் மீரான்குளம் யாக்கோபு என்பவர் சுயநினைவின்றி படுத்திருந்தார். பிறகு மறுநாள் 24 5 2020 அன்று இரவு பத்து முப்பது மணி அளவில் என்னையும் மகேந்திரனும் முகவரி கேட்டு வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பி விட்டனர்.

எங்களுக்கு சம்பந்தமே இல்லாத யாக்கோபு ராஜ் என்பவர் எனது மருமகன் மகேந்திரனிடம் குடிக்க 500 ரூபாய் பணம் கேட்டதாகவும் பணம் இல்லை என சொன்னதுக்கு கெட்ட வார்த்தைகளால் திட்டி உன்னை வெட்டிக் கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் இதனால் மகேந்திரன் பயந்துகொண்டு நின்றதாகவும் என்னைப் பார்த்தவுடன் யாக்கோபு ராஜ் அங்கிருந்து செய்துவிட்டதாகவும் எங்களது பெயரை சட்ட முரணான தவறாக பயன்படுத்தி சாத்தான்குளம் தலைமை காவலர் அழகு மாரிச்செல்வம் நிலைய பொறுப்பில் இருக்கும்போது முன்னாள் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பொய் புகார் பதிவு செய்து உள்ளனர். தற்போது யாக்கோபுராஜ் என்னிடம் தெரிவித்ததன் அடிப்படையில் பொய் புகார் செய்திருப்பது தெரியவருகிறது.

ஆகவே தாங்கள் எனது மனுவை ஏற்று ஒரு பொறுப்புள்ள அதிகாரியாக இருந்துகொண்டு கடமை தவறி தனது சுயநலத்திற்காக பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து 23 5 2020 அதிகாலை 3:00 மணி முதல் மறுநாள் 24 5 2020 22:30 வரை சாத்தான்குளம் காவல் அதிகாரிகளால் என்னையும் மகனையும் சட்டவிரோத காவலில் பிடித்து அடைத்து வைத்த காவல் அதிகாரிகள் மீதும் எங்கள் பெயரை சட்ட முரணாக பயன்படுத்தி யாக்கோபு ராஜ் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’’ என்று கூ றப்பட்டிருக்கிறது.

இது குறித்து வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் நம்மிடம், ‘’சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர், எஸ்.ஐக்கள் மற்றும் காவலர்கள் சட்டத்தை மீறிய செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது சம்மந்தமாக வழக்கு தொடர்ந்துள்ளோம். நிச்சயமாக தவறு செய்திருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

மனிதர்களை மாட்டை அடிப்பதுபோல் அடித்துன்புறுத்தியிருக்கிறார்கள். பின் பகுதியில் தசை உள்ள நபர்களை நிர்வாணமாக விட்டு மணிக்கணக்கில் அடித்திருக்கிறார்கள். அடிக்கும் கம்பில் ரத்தம் படியும் வரை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். எல்லாமே அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வருகிறது.நிர்வாணமாக்கி பின் பகுதியில் அடிக்கும் ஒருவிதமான மனநிலை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அன்று ஒருவரை அப்படி தாக்கும்போது ஸ்டேசனில் பெண் காவலர் கூட இருந்திருக்கிறார்.

இவர்கள் கிட்டதட்ட தனிராஜ்யம் நடத்தியிருக்கிறார்கள். நிச்சயம் அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்போம். மற்றபடி யாக்கோப்பு ராஜ், தங்கவேல்யின் புகார் குறித்து வழக்குபதிவு செய்யப்படும் என நம்புகிறோம். தேவைப்பட்டால் இதற்கும் நீதிமன்றம் செல்வோம்’’ என்றார்.

இன்னும் ஏராளமான புகார்கள் சாத்தான்குளம் காவல்நிலையத்தை சுற்றியிருக்கிறது என்கிறார்கள் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here