அம்பலச்சேரியில் அபாய நிலையில் மின்மாற்றி, மின்கம்பம். சீரமைக்க கோரிக்கை

0
332
sathankulam news

சாத்தான்குளம், ஜூலை 29:

அம்பலச்சேரியில் அபாய நிலையில் காணப்படும் மின்மாற்றி , மின்கம்பங்கள், மின் வயர்களை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அம்பலசேரியில் ஆர்.சி தெருவில் பிஷப்ரோச் ஆர்.சி துவக்கப்பள்ளி செயல்படுகிறது. பள்ளியில் இருந்து 15அடிக்கு அருகில் பின்புறம் மின்சார மின்மாற்றி உள்ளது. இதன்மூலம் கிராமமக்களுக்கு வீடுகளுக்கு மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மின்மாற்றி அருகில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டி உள்ளது. குளியல் தொட்டிக்கும் மின்மாற்றிக்கும் இடைவெளி 10அடி தூரம் உள்ளது.

பள்ளி அருகில் குழந்தைகள் விளையாடி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் மக்கள் காலை, மாலை என குளியல் மற்றும் துணி துவைப்பது தொடர்பாக இருந்து வருகின்றனர். இந்த மின்மாற்றி முறையான பராமரிப்பு இல்லாததாலும், உயரழுத்த கம்பியில் உள்ள கோப்பை உடைந்துள்ளதாலும் மின்மாற்றியில் தினமும் தீப்பொறி ஏற்படுகிறது. இதனால் மின்மாற்றி தீப்பற்றி பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உயர் அழுத்த மின் ஏற்பட்டு வீடுகளில் அடிக்கடி மின் பழுது ஏற்படுகிறது. இதனால் கிராமமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், இப்பகுதியில் மின் மாற்றி உரிய பராமரிப்பு இன்றி பல காலங்களாக உள்ளது. இதனால் மின்மாற்றி தீப்பற்றி எரிவது அடிக்கடி நிகழ்கிறது. மேலும் உயர் அழுத்த கம்பிகளும் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வீடுகளில் மின்சப்ளை அடிக்கடி துண்டிக்கப்படும் நிலை தொடர்கிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்பகுதியில் மின் பழுது என்றால் பழனியப்பபுரம் மின்வாரிய அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டால் அதிகாரிகள் பேசுவது இல்லை. ஆதலால் அதிகாரிகள் பார்வையிட்டு இப்பகுதியில் பழுதடைந்துள்ள மின்மாற்றி , மின்கம்பங்கள், மின்கம்பிகளை சீரமைத்து கிராம மக்களுக்கு சீரான மின்சப்ளை செய்ய வேண்டும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here