தினசரி ரூ 40 ஆக இருந்த கடை வாடகை ரூ 400 ஆக உயர்வதற்கு எதிர்ப்பு – தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம் !

0
88
thoothukudi market

தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளுக்கு பலமடங்காக வாடகை உயர்த்திய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள வஉசி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு 500க்கும் மேற்பட்ட கடைகள் மூலமாக பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், பழைய புதிய இரும்பு சாமான்கள், தையல் தொழில் கடைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வித கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த மார்க்கெட்டில் செயல்படும் கடைகளுக்கு வாடகை வசூலிக்க ஒவ்வொரு ஆண்டும் ஏல முறையில் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து வந்தது. தற்போது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒருபகுதியாக நாளை முதல் வ உ சி மார்க்கெட்டில் இதுவரை நடைமுறையில் உள்ள வாடகை வசூலிக்கும் ஆணையை ரத்து செய்த மாநகராட்சி நிர்வாகம், நேரடியாக கடை வாடகை வசூலிக்க போவதாக அறிவித்தது.

மேலும் தினசரி ரூ 40 ஆக இருந்த கடை வாடகையை ரூ 400 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி திருத்தப்பட்ட புதிய வாடகை பட்டியலை மார்க்கெட் பகுதியில் வைப்பதற்காக இன்று மாநகராட்சி ஊழியர்கள் முயற்சித்தனர்.இதனை கண்ட வியாபாரிகள் புதிய வாடகை பட்டியலை வைப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் அனைத்து வியாபாரிகளும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி நிர்வாகம் புதிய வாடகை திட்டத்தை கைவிட்டு பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் வியாபாரிகள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகம் சுமார் இரண்டு மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here