’போராட்டத்தின் பின்னணியில் சீன நிறுவனம் இருக்கிறது !’ – இது வேதாந்தா நிறுவனத்தின் குற்றசாட்டு

0
39
sterlite news

’தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டியதும், அவர்களுக்கு நிதி உதவி வழங்கியதும், சீன நிறுவனம்தான்’ என்று நீதி மன்றத்தில் குற்றசாட்டை தெரிவித்திருக்கிறது வேதாந்தா நிறுவனம்.

தூத்துக்குடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலை, விரிவாக்கம் செய்வதற்காக அரசிடம் விண்ணப்பித்தது. அரசும் அதற்கு ஒப்புதல் அளித்தது.

இந்தநிலையில் விரிவாக்கம் செய்வதற்கு எதிராக சுற்றுவட்டார பகுதி மக்களால் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலை எதிர் நோக்கியிருந்த அரசியல் கட்சிகள் சில, அரசுக்கு எதிராக அலையை உருவாக்க, ஆலைக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. விரிவாக்கத்துக்கு எதிரான போராட்டம் ஒட்டு மொத்த ஆலைக்கு எதிரானதாக ஆனது.

இதில் சில சமூக ஆர்வலர்கள் என்கிறவர்கள் பலர் ஈடுபட்டனர். சில அமைப்புகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் போராட்டத்தில் குதித்தன. பக்கபலம் இருப்பதால் உள்ளூர் வாசிகளின் போராட்டம், தொடர்ந்து 100 நாட்களை எட்டியது.

இந்தநிலையில் மே 22ம் தேதி ஆலைக்கு எதிராக திரண்ட கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றது. அதுவரை போராட்ட களத்தில் நின்ற சமூக ஆர்வலர்கள் பலர் அந்த கூட்டத்தில் இல்லை. கட்டுக் கடங்காத கூட்டத்துக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு பெரும் கலவரமாக ஆனது.

கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற கூட்டத்தினருக்கும் போலீஸாருக்கும் இடையே மல்லுகட்டு உருவானது. இந்த கலவரத்தின் உச்சமாக போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அந்த வகையில் 13 பேர் பலியானார்கள்.

ஆலைக்கு எதிரான போராட்டம் 13 பேர் உயிருக்கு நீதி கேட்டு என்றானது. விஸ்பரூபம் எடுத்த இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஆலையை மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலை மூடப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரங்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுசூழலை கண்காணிக்க வேண்டிய மாநில அரசு, சுற்றுசூழலை காரணம் சொல்லி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாதாடி வருகிறது. ஆலை நிர்வாகம் மீண்டும் ஆலையை திறக்க கேட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே அரசியல் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பும் ஆலைக்கு எதிராக நீதி மன்றத்தில் முறையிட்டு வருகிறது. இதற்கிடையே ஆலையை மூடியதால் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியது எனவே ஆலையை திறக்க வேண்டும் என்று ஒரு தரப்பு கோரிக்கை வைத்து வருகிறது.

இந்த பிரச்னையெல்லாத்துக்கும் மூல காரணம் அந்நிய சக்திகளின் சதிதான் என்று சிலர் சொல்லி வந்தனர். அவர்களை சிலர் விமர்சித்து வந்தனர்.

இந்தநிலையில் இன்று வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானிசுப்பராயன் அமர்வு முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. வேதாந்தா நிறுவனம் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரியமாசுந்தரம் ஆஜரானார். அப்போது அவர், “ஆலை விரிவாக்கத்திற்கு ஏற்கெனவே அரசிடம் அனுமதி வாங்கியுள்ளோம். இருந்தாலும், மக்கள் போராட்டத்தினாலும், 13 பேர் மீதான துப்பாக்கிச்சூடு காரணமாகவே ஆலை மூடப்பட்டது. மே 22 போராட்டத்தில், ‘எப்படி 20 ஆயிரம் பேர் வந்தார்கள் எனத் தெரியவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என்றார்.

ஒரு சிலரின் அரசியல் நோக்கம் மற்றும் சில என்ஜிஓ-க்களினால் இந்தப் போராட்டம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. மூடல் உத்தரவு போடும்போது,13 பேர் உயிரிழந்தனர் என்ற காரணத்தை தமிழக அரசு கூறிவிட்டு, இப்போது நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணம் என்கின்றனர். துப்பாக்கிச்சூடு தொடர்பான சிபிஐ விசாரணையில் நாங்கள் கிடையாது. ஆனால், எங்கள் நிறுவனத்தை தண்டித்துள்ளனர்.

ஆலை மூடப்பட்டாலும், பராமரிக்க அனுமதி மறுப்பதாலும் அரசும் சரியாகப் பராமரிக்காததாலும் அமிலங்கள் வெளியேறி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது. போராட்டக்காரர்களுக்கு அந்நிறுவனம்தான் நிதி உதவி வழங்குகிறது” என தன் தரப்பு வாதத்தை முன்வைத்தது. இந்த விசாரணை நாளையும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here