தூத்துக்குடியில் கரோனா இறப்பு சதவீதம் குறைவு – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

0
153
thothukudi gh

தமிழகத்திலேயே தூத்துக்குடியில் கரோனா இறப்பு சதவீதம் குறைவாக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் கரோனா இறப்பு சதவீதம் 1.62 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு சதவீதம் மிகக்குறைவாக (0.7 சதவீதம்)உள்ளது‌.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனையில் 75 படுக்கைகள் ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழக அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கையின் அடிப்படையில் 1,18,000 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கடல் சார்ந்த பகுதியாக இருப்பதால் காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தினந்தோறும் 2000க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. ஊரகப்பகுதிகளில் முகக்கவசம் அணிவதில் அக்கறை செலுத்த வேண்டும்.

கோவிட் மருத்துவ கழிவுகளை அலட்சியமாக கையாள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் நடைபெறும் கரோனா தடுப்பு பணியில் மருத்துவ கழிவுகளை கையாள்வதில் தவறுகள் நடந்திருக்கலாம். அவை சரிசெய்யப்படும் என்றார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், உறைவிட மருத்துவர் சைலஸ்ஜெபமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here