காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம்

0
121
kamanayakkanpatti

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் சுமார் 325 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பரலோக மாதா தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்புப் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி இம்மாதம் 15ஆம் தேதி அதிகாலை தேரடித் திருப்பலி, கும்பிடு சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது மத்திய மற்றும் மாநில அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் வியாழக்கிழமை நடைபெறவிருந்த காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டது. தினமும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெறும்.

இறைமக்கள் மற்றும் பொதுமக்கள் ஆலயத்திற்கு வராமல் திருப்பலி நிகழ்ச்சிகளை யூடியூப் சேனல், உள்ளூர் தொலைக்காட்சிகளில் வீடுகளில் இருந்தபடியே அந்த வழிபாடுகளில் பங்கேற்கும்படி கேட்டுக் கொண்டார், பாளை மறை மாவட்ட ஆயர் ச.அந்தோணிசாமி.

மேலும், அரசு உத்தரவுபடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளி என்பது நாம் மற்றொருவர் மீது கொண்டுள்ள அக்கறையைக் காட்டும். மேலும், இந்தாண்டு விண்ணேற்புப் பெருவிழாவில் கொடியேற்றப்படாது. தேர் இழுக்கப்பட மாட்டாது. ஆனால் விழா நாள்களான ஆகஸ்ட் 15 வரை திருப்பலிகள் மட்டும் நிறைவேற்றப்படும் என்றார் ஆயர் ச.அந்தோணிசாமி.

முன்னதாக, புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் புதிதாக ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட குருக்கள் இல்லத்தை பாளை மறை மாவட்ட ஆயர் ஜெபித்து திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், மறை மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.அந்தோணிசாமி, பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பங்குதந்தை அருள்அம்புரோஸ், மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயப் பங்குதந்தை அந்தோணிகுரூஸ், முன்னாள் பங்குதந்தை எஸ்.எம்.அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விண்ணேற்புப் பெருவிழாவையொட்டி காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் மாலை 6 மணிக்கு மேல் விழா திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here