குறைந்த கட்டணம் என கூறி மாணவனிடம் சான்றிதழ் பறிமுதல் – நாசரேத் கல்லூரி முதல்வர், பேராசிரியர் மீது போலீசில் புகார்

0
744
nazareth

திருச்செந்தூர், ஆக. 9- தனியார் பொறியியல் கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் சேர்ப்பதாக கூறி மாணவனின் கல்வி சான்றிதழ்களை பறித்து கொண்டு தர மறுக்கும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் மீது திருச்செந்தூர் வியாபாரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருச்செந்தூர் அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவர் கந்தசாமி(54). இவர் பழை இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மூத்த மகன் அரவிந்த் ஸ்ரீமுத்து பிளஸ் 2 முடித்துள்ளார். இதனால் மகனை கல்லூரியில் படிக்க வைக்க தங்கராஜ் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இதையறிந்த நாசரேத் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் மாரியப்பன் உட்பட 2 பேரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கந்தசாமி வீட்டிற்கு சென்றிருந்தனர்.

அப்போது அவர்கள் இருவரும், கந்தசாமியிடம், உங்கள் மகனை எங்களது பொறியியல் கல்லூரியில் மிகக்குறைந்த கட்டணத்தில் படிக்க வைப்பதாகவும், இப்போது மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், மற்றும் சாதி சான்றிதழ்களை தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கந்தசாமி, தனது மகனின் அனைத்து அசல் சான்றிதழ்களையும் அவர்களிடம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே கந்தசாமி தனது மகனுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கும், பொறியியல் கல்வி கலந்தாய்வுக்கும் விண்ணப்பிக்க சான்றிதழ் தேவைப்படுவதாக மாரியப்பனிடம் கூறியுள்ளார். இதையடுத்து மாரியப்பன் சான்றிதழ்களை கொடுக்காமல் அவரை அலைக்கழிக்க செய்துள்ளார். இதனால் மனமுடைந்த கந்தசாமி இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசிஸ் நிலையத்தில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசார், கல்லூரி முதல்வர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, மாணவனின் அனைத்து சான்றிதழ்களும் கல்லூரியில் தான் உள்ளது என்றும், நாளை வந்து அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் போலீசிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மறுநாளே கந்தசாமி மகனை அழைத்து கொண்டு கல்லூரிக்கு சென்று கல்லூரி முதல்வரை சந்தித்தபோது, உங்களது சான்றிதழ்கள் எதையும் தர முடியாது, உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த கந்தசாமி, தனது மகனை அழைத்து கொண்டு திருச்செந்தூர் தாலுகா போலீசில், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் மாரியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here