நாட்டு வெடிகுண்டு வீசி போலீஸ்காரர் கொலை – தமிழக டிஜிபி நாளை இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார்

0
255
police

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள வெள்ளூரரைச் சேர்ந்தவர் துரைமுத்து. இவர் மீது நெல்லை மற்றும் தூத்துக்குடியில் உள்ள காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பேட்மாநகரத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை முன்விரோதம் காரணமாக ரவுடி துரைப்பாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதற்குப் பழிக்குப்பழியாக துரைமுத்துவின் சகோதரர் கண்ணன் என்பவரை வினோத் தரப்பினர் கொலை செய்தனர்.

இந்நிலையில் மீண்டும் பழிக்குப்பழியாக உயிரிழந்த வினோத்தின் ஆதரவாளர்களைக் கொலை செய்யும் திட்டத்துடன் துரைமுத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இத்தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான போலீஸார், ரவுடி துரைமுத்துவைத் தேடி வெள்ளூருக்குத் தேடிச் சென்றுள்ளனர்.

ஆனால், ரவுடி துரைமுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்நிலையில் துரைமுத்துவின் செல்போன் நம்பரை டிராக் செய்த போலீஸார், டவர் மூலம் மணக்கரை அருகிலுள்ள மலைப்பகுதியில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் மணக்கரைப் பகுதிக்குச் சென்றனர்.

அப்போது போலீஸாரைப் பார்த்ததும், தப்பியோட முயன்றபோது, கையில் வைத்திருந்த நாட்டுவெடிகுண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்ததாகத் தெரிகிறது. இதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்புக் காவலர் பாலசுப்பிரமணியன் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

அதேபோல, படுகாயம் அடைந்த ரவுடி துரைமுத்துவும் சிறிதுநேரத்தில் உயிரிழந்தார். இருவரது உடல்களும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அப்பகுதியை சேர்ந்த சாமிநாதன்,சுடலைகண்ணு,சிவராமலிங்கம் ஆகியோரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

.காவலர் சுப்பிரமணியன் கடந்த 2017ஆம் ஆண்டுதான் காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த காவலர் சுப்பிரமணியன், தனது முதல் பணியை ஆழ்வார் திருநகரி காவல்நிலையத்தில்தான் தொடங்கியுள்ளார். பணியில் இணைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் தனிப் படை பிரிவில் காவலராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து நாட்டு வெடிகுண்டு கலாசாரத்தை கண்டுபிடிக்க அதற்கென தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட போவதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

தென்மண்டல ஐஜி முருகன், பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் காவலர் சுப்பிரமணி உடலை பார்வையிட்டார். அதேபோல் நாளை காலை தமிழக டிஜிபி திரிபாதி தூத்துக்குடி வருகிறார். காவலர் சுப்பிரமணியன் இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார். அதற்காக இன்றே மதுரைக்கு வந்து அங்கே தங்கி இருந்து நாளை தூத்துக்குடிக்கு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here