ஆலையை முடக்கிவிட்டோம் என ஆனந்தம் கொள்ளாதீர்கள் அரசியல்வாதிகளே.. அமைப்பினரே.. தூத்துக்குடிக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள்..

0
386
sterlite news

கடந்த முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர், தென் மாவட்டங்களில் அடிக்கடி சாதி மோதல் சம்பவங்கள் நடந்து வந்தன. அதை தவிர்க்க வேண்டுமானால் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்காக புதிய புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆய்வு கமிட்டி அறிக்கை வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக புதிய தொழிற்சாலை கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை மக்களிடையே இருந்து வந்தது என்பதை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.

அரசியல் கட்சிகளால் புதிய தொழில் கோரிக்கை கோரப்பட்டு வந்ததும் புதிய தொழில் குறித்த வாக்குறுதிகள் கொடுத்துவரப்பட்டதையும் கூட நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.

துறைமுகம், தாமிரபரணி ஆறு, நான்குவழிச்சாலை என பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பல தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டது.

அந்த வகையில் வந்ததுதான் ஸ்டெர்லைட் ஆலையும். அந்த ஆலை சரியானதா? தவறானதா என்பதை விவரிக்கும் வல்லமை எல்லோருக்கும் இருந்துவிடவில்லை. அதற்கான வல்லுநர்கள்தான் அந்த கருத்திற்கு விடையளிக்க முடியும்.

எந்த ஒரு தொழிற்சாலையும் சுற்றுபுறத்தை பாதிக்கவே பாதிக்காது என்று சொல்லிவிட முடியாது. என்றாலும் அதை ஆழ்ந்து கவனிக்கும் பொழுது அதன் மூலம் எழும் பாதிப்பை தவிர்க்கலாம். அந்த வேலையை மாநில அரசுகள் கையாளுகின்றன.

மாநில அரசின் மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் கண்காணிப்பின்படியே அடுத்தடுத்த நகர்வுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்.ஓ.சி கொடுக்கவில்லை என்றால், ஆலை அடுத்தக்கட்ட முயற்சிக்கு போகமுடியாது.

அப்படி இருக்கும்போது ஆலை மூலமான மாசுவை மாநில அரசு அதிகாரமே கண்காணித்து வருகிறது. அதையும் தாண்டி அதில் தவறு நடக்கிறது என்றால் மாநில அரசுக்கும் அதில் பங்கு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை அது தன்னுடைய தொழில் அளவை விரிவாக்கம் செய்வதற்கு முயற்சி எடுத்தபோது ஏற்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகுதான் ஆலைக்கு எதிராக புகார்களும் போராட்டங்களும் கிளப்பப்பட்டன.

புகார்கள் கிளம்பினால் அதை நேரில் ஆய்வு செய்து அதனை சரி செய்ய வைத்து தொழிற்சாலையை தொடர்ந்து இயங்க செய்வதுதான் ஒரு மாநில அரசின் கடமையாக இருக்க முடியும். ஆனால் ஆளும்கட்சியினரே டவரில் ஏறி நின்று ஆலைக்கு எதிராக கோஷம் போட்டதும்,

ஆளும் கட்சி எம்.எல்.ஏவே ஆலைக்கு எதிராக கலெக்டரிடம் மனு கொடுத்ததும் விநோதமான நடவடிக்கையாகவே பார்க்க முடிந்தது. மேலும் 100 நாட்களாக ஒரு ஆலைக்கு எதிராக சில மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அவர்களின் சந்தேகம் என்ன என்பதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதை செய்யத் தவறியதற்கான காரணம் இதுவரை யாருக்கும் புரியவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் மிக அருகில் இருந்தநிலையில் சிலர் ஆலைக்கு எதிரான போராட்டங்களை அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டதாகவே தெரிகிறது. அவர்களின் அரசியல் ஆடுபுலியாட்டத்தில் அப்பாவிகள் சிலர் பலியானார்கள். பிரச்னை சிறியதாக இருந்தபோதே தடுக்க தவறிய மாநில அரசு, 13 பேர் உயிரை காவு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வீழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து ஆலை சரியா தவறா? வேண்டுமா வேண்டாமா? என்கிற கேள்விகளுக்கு இடமில்லாது எழுந்திருந்த எதிர்ப்பு குரலை தனிக்க, ஆலையை தடை செய்து பிரச்னையை தீர்த்துக் கொண்டது மாநில அரசு. ஆம் முழுமையாக பிரச்னை தீர்ந்துவிட்டது என பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது அவ்வரசு.

ஆலை நிர்வாகமோ நீதிமன்றபடியேறி முறையிட்டு கொண்டிருக்கிறது. நிர்வாகம் பார்க்கிற மாநில அரசே அதற்கு எதிர்ப்பாக வாதம் செய்ததை வைத்து நீதிமன்றம், அரசு செய்துள்ள தடை தொடரும் என அறிவித்திருக்கிறது.

ஆக இந்தியாவின் மொத்த காப்பர் உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதம் காப்பரை உற்பத்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கிறது. துறைமுகம் -தொழிற்சாலைகளை நம்பி ஓடிக் கொண்டிருந்த லாரி தொழில் முற்றிலும் முடங்கிபோனது. அவர்களை நம்பியிருந்த ரோட்டோர ஹோட்டல்கள் காணாமல் போய்விட்டன.

தூத்துக்குடி மாநகரில் தொழிலாளர்கள் மூலம் புழக்கத்தில் இருந்த ஸ்டெர்லைட் பணம் நின்றுபோனது. இதெற்கெல்லாம் மேலாக காப்பரை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உற்பத்தி செய்து வந்த ஆலை முடங்கிவிட்டதால், ஆண்டிற்கு 15 ஆயிரம் கோடி அளவிற்கு காப்பரை நம்நாடு கடந்த இரண்டரை ஆண்டுகளாக இறக்குமதி செய்து வருகிறது.

பொருளாதாரம் மட்டும் முன்னேறினால் போதுமா மக்கள் சுகாதாரமாக வாழவேண்டாமா ? என கேள்வி கேட்க கூடும். ஆமாம் மக்கள் நிச்சயமாக சுகாதாராமாகவே வாழவேண்டும். அப்படியானால் தொழிற்சாலைகளே இருக்க கூடாது என்பதல்ல,தொழிற்சாலைகள் மூலம் சுகாதாரம் கெட்டுப்போகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வேலையை அரசுகள்தான் கவனிக்க வேண்டும்.

ஆலை நிர்வாகம் அதனை சரிவர பின் பற்றவில்லை என்றால், அரசு நிர்வாகம் சரியில்லை என்றுதான் அர்த்தம். அதற்கு தீர்வு ஆலையை மூடுவது அல்ல. அதை முறைப்படி கவனிப்பதே ஆகும். ஒரு ஆலை மாசுபடுத்துகிறது என்றால் அது எந்த அளவிற்கு மாசுபடுத்துகிறது என்பதை அரசின் மாசுகட்டுப்பாடு நிர்வாகம் அறிந்தே ஆகவேண்டும்.

அதற்கான தீர்வை அது தீர்மானிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஆலையையே மூடிவிட வேண்டும் என்பது எந்த அளவிற்கு சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்?

ஆலைக்கு எதிரான போராட்டம் எந்த சூழ்நிலையில் உருவானது என்பதை ஆய்வு செய்து அதற்கு சரியான தீர்வை தேடுவதற்கு பதிலாக ஆலையை மூடியதும் மூடப்பட்டதை ஆமோதிக்கும் வகையில் ஆளும் கட்சி துணை முதல்வர் முதல் எதிர்கட்சிகள் பலவற்றின் தலைவர்கள் வரை ஆலையை மூடியதற்கு ஆதரவு தெரிவித்து வாய்ஸ் கொடுப்பதும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடுவதும் விரும்பத்தக்க வேலை அல்ல இது.

தொழிற்சாலை ஒன்று முடங்கி போவதற்கு ஆளும் அரசு உத்தரவு போடுவதும் அதற்கு எதிர்கட்சிகள் பலவும் துணை நிற்பதுதான் நீங்கள் மக்களுக்கு செய்யும் சேவையா? குறைகளை களைந்து தொழிலை நடத்துங்கள் என்று சொல்ல மாட்டீர்களா? இதன் மூலம் மக்கள் வேலை வாய்ப்பை இழந்து போவதற்கு எல்லாமே நீங்கள்தானே காரணம் ஆவீர்கள்? .

இனிமேல் வரும் தேர்தல் சமயத்தில் தொழிலை தருவோம், அதன் மூலம் வேலைவாய்ப்பை தருவோம் என்று சொல்லிக் கொண்டு தூத்துக்குடி மக்கள் முகத்தில் எப்படி முழிக்கப்போகிறீர்கள்?

தூத்துக்குடியில் நடந்த போராட்டங்களுக்கு ஒட்டுமொத்த மக்களிடமும் ஆதரவு இருக்கிறது என்று நீங்கள் எதை வைத்து முடிவு செய்துவிட்டீர்கள். குறிப்பிட்ட சிலர் தூண்டியது, அப்பாவி மக்கள் அதில் மாட்டிக் கொண்டார்கள் அவ்வளவுதான். அவர்களை அந்த அளவிற்கு போராட தூண்டியவர்கள் யார்? என்ன நோக்கத்திற்காக தூண்டினார்கள்? என்பதை ஆய்வு செய்து அதை வெளிச்சத்துக்கு கொண்டுவர துணிவில்லாத அரசு, ஆலையை மூடிவிடும் நிலைக்கு சென்றது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.

தூத்துக்குடிக்கு மட்டும் நீங்கள் துரோகம் செய்யவில்லை.இதன் மூலம் இந்த நாட்டிற்கே துரோகம் செய்துவிட்டீர்கள்.

-ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here