இன்ஸ்பெக்டர் வேடமணிந்து லஞ்சம் வாங்கியது போல் பாவ்லா காட்டிய தொண்டன் சுப்பிரமணியம் !

0
77
இன்ஸ்பெக்டர்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் வழக்கம்போல நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கை தொடர்பான மனுக்களை கொடுத்துக்கொண்டிருந்தனர்.

இந்நேரத்தில், கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ளே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக வேடம் அணிந்து டிரைவரிடம் பணம் வாங்குவதாக டிராமா நிகழ்த்தினார் வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியம். இவர் தீபா பேரவையின் மாவட்ட செயலாளர் மற்றும் சமூக சேவகராக செயல்பட்டு வருகிறார். போலீஸார் அவரை பிடித்து விசாரித்தனர்.

போலீஸாரிடம் அவர், ‘’தூத்துக்குடி மாநகர மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார்கள் தண்ணீர் கேன் விற்பனையாளர்கள் ஒரு கேன் தண்ணீரை ரூ.30க்கு விற்பனை செய்து வரும் நிலையில், நான் ஒரு கேன் தண்ணீர் ரூ.20க்கு விற்று வருகிறேன்.

எனது சேவை நிறுவனம் மூலமாக மாநகர மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் குடிநீரை விற்பனை செய்து வருகிறேன். ஆனால், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுசீல் எனது நிறுவன வாகனங்களை எல்லாம் வழிமறித்து தொடர்ந்து லஞ்சம் கேட்டு மிரட்டி வருகிறார். இதுகுறித்து நான் கடந்தவாரம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று டி.ஆர்.ஓ.விடம் நேரில் மனு கொடுத்துள்ளேன். இருந்தபோதும் அவர் லஞ்சம் கேட்பது முடிவில்லாமல் தொடர்கிறது.

சென்னையிலுள்ள சாலைகளில் குடிநீர் ஏற்றி வரும் வாகனங்கள் 24மணிநேரமும் சென்று வருகின்றன. இதுபோன்று தூத்துக்குடி மாநகரத்திற்குள்ளும் குடிநீர் ஏற்றி வரும் வாகனங்களை தடை செய்யக்கூடாது என்ற உத்தரவினை போக்குவரத்து போலீசாருக்கு பிறப்பிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுவினை கொடுப்பதற்காக தான் இங்கு வந்தேன்’’ என்று மனுவினை போலீசாரிடம் காட்டினார். இருந்தபோதும் போலீசார் அவரை பித்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். அதிர்ச்சியடைந்த தொண்டன் சுப்பிரமணி தான் அணிந்த போலீஸ் உடையில் தமிழக அரசின் முத்திரை எதுவும் பொறிக்கப்படவில்லை எனவே தன்னை கைது செய்வது தவறு என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருந்தபோதும் போலீசார் தொண்டன் சுப்பிரமணி, அவரது டிரைவர் மற்றும் அவர்கள் வந்திருந்த ஜீப்பையும் பறிமுதல் செய்தனர். இதனால், சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தொண்டன் சுப்பிரமணியிடம் பேசினோம், ‘’வாகனத்தில் ஏற்றிய என்னை மாவட்ட எஸ்பியிடம் அழைத்து சென்றனர். எஸ்பி விசாரித்தார். நிலைமை முழுவதையும் எடுத்து சொன்னேன். ஆனாலும் நீங்கள் செய்தது தவறு தமிழ்நாடு போலீஸ் உடையில் இப்படி நடந்திருக்க கூடாது என்றார் எஸ்.பி.

நான் தமிழ்நாடு போலீஸ் உடையில் வரவில்லை. வாட்ச் மென் உடையும் இதுதான். எனவே இது போலீஸ் உடைதான் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று வாதிட்டேன். சரி இனிமேல் இப்படி செய்தீங்க என்று சொல்லி அவர் என்னை அனுப்பி வைத்தார்.

இடையில் அதிகாரிகாரிகள், அதையே எழுதி கொடுத்துவிட்டு போங்க என்று நிர்பந்தம் செய்தனர். நான் எழுதி கொடுத்துவிட்டு போவதற்கு எந்த தவறும் செய்ய வில்லை. அப்படி எழுதி கொடுத்துவிட்டு போகச்சொன்னால் என்னை அப்படி இப்படின்னு இடித்து தள்ளிய தென்பாகம் இன்ஸ்பெக்டர் மீது புகார் செய்வேன் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுப்பீர்களா என்று கேட்டேன். சரி போங்க என்று அனுப்பி வைத்துவிட்டனர்’’ என்றார்.

மனு கொடுக்க வருவோரை அப்படி இப்படி என ஆய்வு செய்யும் போலீஸார், வேடமணிந்து வந்திருந்த சுப்பிரணியை எப்படித்தான் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் விட்டார்களோ தெரியவில்லை !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here