தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் தரமற்ற தார் ரோடுகள் போடப்பட்டுள்ளதை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
’’நெடுஞ்சாலை துறையின் சார்பில் 2019 – 20ம் ஆண்டில் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் தார் ரோடுகள் போடப்பட்டுள்ளது. இந்த தார் சாலைகள் அனைத்தும் தரமற்றதாகவும், அரசு நிர்ணயித்துள்ள உயரத்திற்கு குறைவாகவும் போடப்பட்டுள்ளன. இதனால் இவையனைத்தும் வர இருக்கும் மழைக்காலத்தில் பெயர்ந்து விரைவில் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்தாக மாறிவிடும்.
இந்த தார் சாலைகள் போடும் போதே தரமற்றதாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் சார்பில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும், சாலை ஆய்வாளர்களிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் அனைத்து இடங்களிலும் தரமற்ற தார் சாலைகள் போட அனுமதித்துள்ளனர். இதனால் மக்களின் வரிப்பணம் கோடிக் கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தார் சாலைகள் அனைத்தையும் தரக் கட்டுபாடு அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து மீண்டும் அதே ஒப்பந்தக்காரரை கொண்டு அரசு நிர்ணயித்த அளவுகளின் படி போடவேண்டும்.
இல்லையெனில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்’’ இவ்வாறு அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.