மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: சிறுமி மரணம் – 3 பேர் காயம்

0
61
accident news

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுமி மரணமடைந்தார்.

கோவில்பட்டியையடுத்த ஊத்துப்பட்டி குமாரபுரம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் மகன் செல்வராஜ்(40). இவர் மற்றும் இவரது மகள்களான சாந்தி(14), லாவண்யா(9) மற்றும் ரம்யா(9) ஆகிய 4 பேரும் குமாரபுரத்தில் இருந்து ஈராச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.

செல்வராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கோவில்பட்டி பசுவந்தனை பிரதான சாலை துறையூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலை அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற கொப்பம்பட்டி போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது மருத்துவர் பரிசோதனை செய்ததில் ரம்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார். எஞ்சிய மூவரும் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து கார் ஓட்டுநர் கூட்டாம்புளியைச் சேர்ந்த சா.ராஜனை(62) கைது செய்தனர். இதற்கிடையில் உயிரிழந்த ரம்யாவின் சடலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது, உயிரிழந்த ரம்யாவின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வலியுறுத்தி அவரது உறவினர்கள், பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் கதிரேசன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் ரவிகுமார் ஆகியோர் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டக் குழுவினருடன் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்துஅவரது உறவினர்கள் சடலத்தை வாங்கிச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here