காயல்பட்டிணம் டிக்-டாக் விவகாரத்தில் உரிய நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை & மன்டே பெட்டிசன் செய்தி தொகுப்பு

0
35
collector news

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தினைத்தொடர்ந்து கலெக்டர் சந்தீப்நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி, கோரம்பள்ளம், வைப்பார் வடிநில கோட்டங்களில் குடிமராமத்து பணியானது ரூ.13கோடியே 14லட்சம் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் விவசாய சங்கங்கள் அமைத்து அதன்மூலமாக மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்திற்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்கனவே செலுத்தியுள்ள 100கோடி வைப்புத்தொகையில் இருந்து பெறப்பட்டுள்ள வட்டியில் ரூ.11கோடி மூலமாக கோரம்பள்ளம் குளத்தை தூர் வாரி ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபோக என்.டி.பி.எல் பங்களிப்பு ரூ.4கோடியில் குளங்களை தூர் வாரும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜன்ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலமாக மழைநீர் சேகரிப்பு திட்டம் விரைவுபடுத்தப்பட இருக்கிறது.

ஊருக்கு 100கைகள் திட்டத்தின் மூலமாக குளங்களை தூர்வாரவும், மரம் நடவும் போன்ற பணிகள் ஊர்தோறும் சமூக பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மக்கள் மற்றும் தனியார்களின் பங்களிப்புடன் இத்திட்டம் இணைந்து செயல்படுத்தப்படும். மொத்தத்தில் மூன்று மாத காலத்திற்குள் அதாவது வடகிழக்கு பருவ மழைக்காலத்திற்கு முன்பாக மாவட்டத்திலுள்ள குளங்களை தூர் வாரி மேம்படுத்திடுவதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும்.

காயல்பட்டணம் நகராட்சியில் பணியாளர்கள் அரங்கேற்றியுள்ள டிக்டாக் வீடியோ காட்சிகள் குறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை நகராட்சி ஆணையர் அளித்தபின்பும் அதன்அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக குலசேகரரப்பட்டணம், மணப்பாடு போன்ற பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர்., ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து அரசிடம் இருந்து எந்தவிதமான அரசாணையும் வரவில்லை என்றார்.

சாயர்புரம் பஜாரிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும்-வர்த்தகர் சங்கத்தினர் கோரிக்கை

சாயர்புரம் வர்த்தகர் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் பண்டாரம், பொருளாளர் ராஜாடேவிட் தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, சாயர்புரத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள், பணியாளர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சாயர்புரம் சுற்றுவட்டாரங்களிலுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் சாயர்புரம் பஜாரிலுள்ள கடைகளுக்கே வந்து செல்கின்றனர்.

மாணவ, மாணவியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் நடமாட்டம் மிகுந்த சாயர்புரம் மெயின் பஜாரில், பஸ் நிறுத்தம் அருகில் அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருவது பெரும் இடையூறாகவே இருந்து வருகிறது. டாஸ்மாக் கடை முன்பாகவே குடிமகன்கள் மது அருந்திவிட்டு அப்பகுதியிலேயே அமர்ந்துகொண்டு தேவையில்லாத சச்சரவுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு குடிமகன்கள் மதுபோதையில் பஜார் வீதிகளில் அரங்கேற்றி வரும் விரும்பத்தகாத செயல்களால் மாணவியர்கள், பெண்கள் பெரும் அவதிக்கும், அச்சத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.

பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள இந்த டாஸ்மாக் மதுபானக் கடையால் பொதுமக்கள் தினம்தோறும் சொல்லமுடியாத துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் இடையூறாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்துவரும் இந்த மதுபானக்கடையை இங்கிருந்து அகற்றவேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இதில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாணவ, மாணவியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த டாஸ்மாக் மதுபானக்கடையை இங்கிருந்து துரிதமாக அகற்றிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அம்மனுவில் கூறியுள்ளனர்.

டாஸ்மாக் மதுபானக்கடைகளில் பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட கோரிக்கை

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: திருச்செந்தூர் தாலுகாவில் அரசின் டாஸ்மாக் மதுபானக்கடைகளாக எண் 9975, 9981 என்ற மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக்கடைகளில் திருச்செந்தூர் தெற்கு புதுத்தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன், அவரது மகன் சரவணன் ஆகியோர் பிரதி மாதம்தோறும் மதுபானக்கடைக்கு ரூ.10ஆயிரத்திற்கு குறையாமல் மாதாந்திர மாமூல் தரவேண்டும் என்று நிர்பந்தித்து வருகின்றனர். டாஸ்மாக் மதுபானக் கடை பணியாளர்கள் மாமூல் கொடுக்க மறுத்தால் கடை பணியாளர்கள் மீது அரசின் மதுபானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் பொய்யான தகவல்களை புகார்களாக தொடர்ந்து அனுப்பி தொந்தரவு கொடுத்தும் வருகின்றனர்.

அதோடு, அரசின் டாஸ்மாக் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டுவரும் மேற்கண்ட டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடுவதற்கும் பொய்யான புகார்களை தொடர்ந்து அரசுக்கு அனுப்பி வைத்தும் வருகின்றனர். எனவே, அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை பணியாளர்களிடமே மாமூல் கேட்டு மிரட்டி வருபர்கள் மீது காவல்துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும், டாஸ்மாக் பணியாளர்கள் எந்தவிதமான அச்சுறுத்தல்களும், அச்சமும் இன்றி பணி செய்திடவும் உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

தூத்துக்குடி முடுக்குகாடு பகுதியில் சாலை அமைக்க கோரிக்கை

தூத்துக்குடி முடுக்குகாடு பகுதியை சேர்ந்த ஜனநாயக உழைக்கும் பெண்கள் இயக்க பொறுப்பாளர் ராமலெட்சுமி தலைமையில் பெண்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி முடுக்குகாடு பகுதியில் சுமார் 170குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் பகுதிக்கான போக்குவரத்திற்கென மூன்று வழித்தடங்கள் உள்ளன. இருந்தபோதும் இந்த மூன்று வழித்தடங்களிலும் சாலைகள் முறையாகவே இல்லை.

குண்டும் குழியுமான சாலைகளால் மாணவ, மாணவியர்கள், முதியவர்கள், பொதுமக்கள் என அனைவரும் தினம்தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு மழைக்காலங்களில் இந்த ரோடுகளில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு, பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. எனவே இப்பகுதியிலுள்ள பொதுமக்களான நாங்கள் பயன்பெறும் வகையில் புதியதாக சாலைவசதி அமைத்து தந்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here