மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி திரையரங்குகள் திறப்பு நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

0
339
kadambur raju news

தூத்துக்குடி

திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு பின் நல்ல முடிவை தமிழக அரசு அறிவிக்கும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலமாக திருநங்கைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பாக்கு மட்டை தயாரிப்பு அலகு தொடக்க நிகழ்ச்சி, இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தல், நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.

இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் ஆசிரியர்கள் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி அமைச்சர் கடம்பூர் ராஜு கவுரவித்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ’’தமிழக அரசு தொடர்ச்சியாக எடுத்து வரும் சீர்த்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக தனியார் பள்ளிகளில் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் கிளாஸ், இணைய வகுப்பு, தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இணைய வசதி உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் தமிழக அரசு நிறைவேற்றி தந்துள்ளது. இதுவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான காரணி. இன்று நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நான் அமைச்சர் என்ற உணர்வுடன் கலந்து கொள்ளாமல் நானும் ஒரு ஆசிரியர் என்ற உணர்வுடன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தொடர்ந்து பேசுகையில், திரையரங்குகளுக்கு படங்களை விநியோகம் செய்யப் போவதில்லை என திரைப்பட தயாரிப்பாளர்கள் கூறவில்லை. க்யூப் மூலமாக படங்களை திரையிடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் விளைவாக திரைப்படத் துறையினர் க்யூப் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டண தொகையை வெகுவாக தமிழக அரசு குறைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது எழுந்துள்ள பிரச்சனையும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கியூப் நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு செய்ய வேண்டும். இதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா ஊரடங்கு தளர்வினை படிப்படியாக தமிழக அரசு அமல்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது ஆலயங்கள், கோவில்கள், மசூதிகளில் பொது தரிசனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆலயங்களிலும், கோவில்களிலும் பொதுமக்கள் அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால் திரையரங்கை பொருத்தவரை 2 அல்லது 3 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து திரைப்படம் பார்க்க வேண்டும் என்பதால் திரையரங்கு திறப்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலை எதிர்நோக்கி இருக்கிறோம். திரையரங்குகள் திறப்பது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்களுடன் மத்திய அரசு காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளது. இதை தொடர்ந்து வெளியிடப்படும் வழிகாட்டுதல் அடிப்படையில் திரையரங்கு திறப்பது குறித்து தமிழக அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும்.

கிசான் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இதுகுறித்து விவசாயத் துறை முதன்மைச் செயலாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே தவறு நடந்து விட்ட போதிலும் அதை உடனடியாக சரி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். வருகிற 22-ஆம் தேதி முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வு பணியில் ஈடுபட உள்ளார். இதில் மக்கள் எதிர்பார்க்கின்ற தூத்துக்குடி மாவட்டத்திற்கு நன்மை பயக்கும் நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கும் ஆலோசனை கூட்டமாக இருக்கும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here