73 ஆண்டுகால சுதந்திர நாட்டில் நுழைவு தேர்விற்கு எதிர்ப்பு ! – வெட்கம்.. வேதனை..

0
215
neet exam news

73 ஆண்டுகால சுதந்திர நாட்டில் நுழைவு தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் திணறுகிறார்கள் என்றால், அதற்காக அனைவரும் வெட்கப்பட வேண்டும் வேதனைப்பட வேண்டும்.

நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது மருத்துவ துறையில் சேர்ந்து படிப்பதற்கு இந்திய அளவில் நடத்தப்படுகிற ஒரு நுழைவுத் தேர்வு அவ்வளவுதான். எந்த ஒரு படிப்பிற்கும் நுழைவு தேர்வு அவசியமா என்றால் அவசியமே என்பார்கள் நன்மை விரும்பிகள். அந்த தேர்விற்கு மாணவர்கள் திணறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும். கட்டமைப்பு சரியில்லை என்றால் அதை மாற்ற கோரிக்கை வைக்க வேண்டும். அதற்காக தேர்வே வேண்டாம் என சொல்ல கூடாது.

எல்லாவற்றிலும் தமிழர்கள் திறமையானவர்கள் என மார்தட்டிக் கொள்ளும் தமிழ் மாநில அரசியல்வாதிகள், மாணவர்கள் திணறுகிறார்கள் என்று சொல்லி இந்திய அளவிலான நுழைவு தேர்வான ‘நீட்’யை கண் மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இதை சிலர் தவிர, பலர் ரசிக்கவில்லை ஆதரிக்கவும் இல்லை. எதிர்ப்பவர்கள் எதாவது ஒருவடிவில் வெளியில் காட்டுகிறார்கள். ஆனால் ஆதரிப்பவர்கள் பெரிதாக வெளியில் காட்டிக் கொள்ளவில்லை அவ்வளவுதான்.

தரம்வாய்ந்த கல்வி முறையே தரம் வாய்ந்த வல்லுநர்களை உருவாக்குகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த சிந்தனை எல்லோரிடமும் இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இருக்கிறது சிலரின் நோக்கம். காலமாற்றங்களுக்கு தக்க கல்வியில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். அதில் தரம் வேண்டும் என்றால் நிச்சயமாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

அதுபோல் உலக அளவில் உரையாட ஆங்கிலம் உதவுகிறது. அதுபோல் இந்திய அளவில் உரையாட இந்திய அளவிலான மொழி ஒன்றை கூடுதலாக படிக்க வேண்டும். அதில் தவறில்லை. அவரவர் தாய் மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளும் அரசு, இந்திய அளவில் கூடுதலாக ஒரு மொழியையும் உலக அளவில் ஒரு மொழியையும் சேர்த்து படிக்கும் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது.

ஆனால் தமிழ்நாட்டில், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, இந்திய அளவிலான நுழைவு தேர்விற்கு எதிர்ப்பு, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு என மனித வள வளர்ச்சிக்கு தேவையான அத்தனை முன்னெடுப்புகளுக்கும் எதிர்ப்பு கொடுப்பதே சிலருக்கு வேலையாக இருக்கிறது. குறிப்பிட்ட சதவீதம் பேர்கள் மட்டுமே எதிர்ப்பு கொடுக்கிறார்கள். திட்டங்களை ஆதரிப்பவர்களே அதிகம். என்றாலும் ஆங்காங்கே போராட்டங்கள் அவ்வப்போது நடப்பதால் திட்டத்துக்கு எதிர்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது.

உலக வரலாற்றில் ஐந்து வகையான இயற்கை நிலஅமைப்பையும் ஒருங்கே பெற்றிருக்கிறது நம் நாடு. இயற்கை வளமிக்க இந்த நாடு, எல்லாவகையிலும் உலகிற்கே முன்மாதிரியாக விளங்கிய வரலாறுகள் உண்டு. அன்பு, அருள், ஈகை என பண்புகளை கொண்ட நம் நாட்டில் நாடோடியாக வந்தவர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்தார்கள். வியாபாரத்திற்கு வந்தவர்கள் நம்மை அடிமைபடுத்தும் நிலைக்கு உயர்ந்தார்கள். வந்தவர்கள் எல்லாம் அவரவர் சரித்திரத்தை இந்திய வரலாற்றோடு பிணைத்தார்கள்.

இயற்கையை வழிபட்ட நாம், வந்தவர்கள் கொண்டு வந்த கடவுளையும் வழிபடும் நிலைக்கு தள்ளப்பட்டோம். இயற்கை சீற்றத்தால் உலகமே மாற்றம் கண்டபோது, குமரிக்கண்டம், பூம்புகார் போன்ற உயர்ந்த நம் வாழ்க்கை அடையாளங்கள் அமுக்கப்பட்டு புதிய வரலாறு நமக்கு பாடமானது. நாம் அடிமையாக வாழ்ந்த வரலாறே ஆண்டாண்டு காலம் நமக்கு பாடமாக திணிக்கப்பட்டது. அதனால் நம்மில் சிலரிடமிருந்து இன்னமும் அடிமைபுத்தி அகலவே இல்லை. நம் பண்டைய வரலாறுகள் கூட உருமாறின. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட நம் வரலாறும் அடுத்தவர்கள் சொன்ன ஆண்டுகளை தாண்ட முடியாமல் தள்ளாடுகிறது.

பல பல குழுக்கலாக இருந்தாலும் கலாச்சாரத்தாலும் பண்பாட்டிலும் நாம் ஒன்றாகவே பிணைந்திருந்தோம். அப்படிப்பட்ட நம்மை பல பிரிவாக பிரித்தார்கள். நமக்குள் உருவான குழுக்கள், அவர்கள் வேரூன்ற வாய்ப்பாக அமைந்தது. சாதிப்பிரிவுகளின் வழியாக திராவிடன், ஆரியன் என்ற பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன. அதுபோல் வடநாட்டான், தென்நாட்டான் என்கிற பிரிவுகள் வளர்க்கப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை வடநாட்டான் தென்நாட்டான் என்கிற பாகுபாட்டு தீ அனையாமல் இருந்து கொண்டே இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைக்கும் எந்த திட்டமும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

உயரத்தில் ஏறி உட்கார நினைப்பவர்கள் எல்லாம், அவரவர் கொள்கை, கோட்பாடே சிறந்தது என்கிறார்கள். அவர்களின் கோட்பாடுகளை நிலை நிறுத்தவே விளைகிறார்கள். இத்தகைய அரசியல் போட்டியால் ஏதும் அறியாத அப்பாவி மக்கள், பலிகடா ஆக்கப்படுகிறார்கள். அந்த வகையில் எந்த திட்டம் நல்ல திட்டம் எந்த திட்டம் தவறான திட்டம் என மக்களால் உறுதிபடுத்த முடியவில்லை.

எந்த நோக்கத்துக்காக திட்டங்கள் உருவாக்கப்படுகிறது? எந்த நோக்கத்துக்காக திட்டங்கள் ஆதரிக்கப்படுகிறது? எந்த நோக்கத்துக்காக திட்டங்கள் எதிர்க்கப்படுகிறது ?என்று ஒன்றுமே தெரியவில்லை. ஆதிரிப்பவர்களாலும் எதிர்ப்பவர்களாலும் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

இந்தியா விடுதலைபெற்று 73வது ஆண்டுள் ஆகிறது. இன்னமும் நாம் அடிப்படை வசதிகள் பெறுவதில் ஆரம்ப கால கோரிக்கையில்தான் இருக்கிறோம். அடிப்படை வசதிகளுக்காக ஏங்குவோர் இன்னமும் இருக்கிறார்கள். அப்படியானால் விடுதலை பெற்று இவ்வளவு காலம் ஆனபிறகும் நாட்டில் ஒரு மாற்றமுமே நடக்கவில்லையா? என்கிற கேள்வி எழும்.

அப்படி அல்ல. உலக நாடுகள் கவனிக்கும் அளவிற்கு நம்நாடு முக்கிய இடத்தில்தான் இருக்கிறது. என்றாலும் அரசியல் காரணங்களுக்காக நமக்குள் நடந்து வரும் சண்டையால் நம்முடைய அதிகப்படியான வளர்ச்சிக்கு பங்கம் ஏற்படுகிறது. ஆளும் கட்சி, எதிர்கட்சி என அத்தனை அமைப்புகளும் வளர்ச்சிக்கு மட்டுமே உழைக்க வேண்டும்.

அப்படி உழைக்க முன்வந்தால், எதிர்கால ஆட்சியாளர்களான மாணவர்களை சரியான வழியில் அழைத்து செல்ல வேண்டும். அவர்களுக்கு ஊட்டம், ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும். விட்டுக் கொடுத்தலை முன்நிறுத்தி குடும்பம், நாடு சம்மந்தமான பற்றுதலை அவர்களுக்குள் வளர்க்க வேண்டும். நியாயம், தர்மம், நேர்மை போன்ற நற்பண்புகளுடன் வளர்க்கப்படும் மாணவன், எதிர்காலத்தில் நல்ல சமூகம் அமைய வித்தாக அமைவான்.

அதற்கு மாறாக உள்ளுக்குள் எதோ ஒரு நோக்கத்தை வைத்துக் கொண்டு, அவனை போராட தூண்டுவது, தற்கொலை செய்ய தூண்டுவது போன்றவை மன்னிக்க முடியாத குற்றமாகும். எழுபது ஆண்டுகளுக்கு மேல் சுதந்திர நாடாக இருக்கிறது நம் நாடு. அப்படிபட்ட நாட்டில் மருத்துவராக விரும்பும் மாணவன் ஒருவனுக்கு நுழைவு தேர்வை எதிர்கொள்ள கூட தைரியம் இல்லை. அவனுக்கு நுழைவு தேர்வை சரியான முறையில் நடத்தமுடியவில்லை. அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்பு வருகிறது என்றால் என்ன அர்த்தம்? ரஜினிகாந்த் சொன்னது போல் சிஸ்டம் சரியில்லை என்றுதானே அர்த்தம்?

அதற்காக இத்தனை காலம் நாட்டு நிர்வாகத்தில் இருந்தோர் வெட்கப்பட வேண்டும்.. வேதனைப்பட வேண்டும்..

-நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணபெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here