சிறார் செய்தியை பளார் ஆக்காதீர்கள் – இரவில் கிரைம் வேண்டாம் – ஊடகங்களே உணருங்கள் – நடுநிலை எஸ்.சரவணப்பெருமாள்

0
412
nadunilai s.saravanaperumal

சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பார்கள் கிராமத்தில். அதாவது நாம் எதை சொல்லச்சொல்லி கொடுக்கிறோமோ கிளிகள் அதை, அப்படியே சொல்ல முயற்சி செய்யும் நாளடைவில் சொல்லவும் செய்துவிடும். அந்த வகையை சார்ந்ததுதான் கள்ளம் கபடமற்ற சிறார் உள்ளம். தொலைகாட்சி விளம்பரங்களில் சிறார்கள் எப்படி காட்டப்படுகிறார்களோ அப்படியே நிஜத்திலும் செய்து காட்டும் கிளிப்பிள்ளை குணம் கொண்டவர்கள் சிறார்கள்.

அத்தகைய உள்ளங்கள் தினந்தோறும் எத்தனையோ கசப்புகளை தொலைக்காட்சிகளிலும் மற்ற செய்தி சாதனங்கள் மூலமும் பார்க்கிறது. இந்த உலகில் தோன்றுகிற எதுவும் தவறில்லை என்றாலும் அது அளவுக்கு மீறும் போது தவறு என்றாகிறது.

எத்தனையோ நல்ல விசயங்கள் ஊடகங்கள் மூலமும் மற்ற செய்தி சாதனங்கள் மூலமும் வெளியாகிறது. அந்த நல்ல விசயங்கள் கொடுக்கும் தாக்கம் இந்த சமூத்தில் நல்லதையே ஏற்படுத்தும் என்பதில் எள் அளவும் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் தவறுகள் விதைக்கப்படும் போது அது சமூகத்தில் தவறானதை வளர்த்துவிடும்.

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் உணர்ந்திறாத யூகித்திறாத இளம் சிறார்களுக்கு ஊடகம் சொல்லும் கதைகளே வேதவாக்கு. கடந்த காலங்களில் பாட்டி சொன்ன கதைகள் இப்போது இல்லை. கதை சொல்லும் அளவிற்கு பாட்டிகள் கூட இருப்பதாக தெரியவில்லை. படிப்பு தவிர வெளி உலகம் என்பதை முழுக்க முழுஅக்க ஊடகங்கள் மூலமே சிறார்கள் அறிகிறார்கள்.

அத்தகைய அறிவிப்பை வழங்கும் ஊடகங்கள் நல்லதை மட்டுமே சொல்லக் கூடியதாக இருந்தால் அதை பார்க்கும் சிறார்கள் நல்ல வழியை தேடுவார்கள். ஆனால் போட்டி நிறைந்த இந்த காலத்தில் செய்திகள் அதிவிரைவாக சொல்லப்படுகிறது. அந்த செய்தி சமூகத்துக்கு நல்லது செய்யுமா கெடுதலை விளைவிக்குமா என்பதெல்லாம் பார்க்க நேரமில்லை.

சமீபத்தில் பள்ளி மாணவர்கள் பலர் சிறு சிறு காரணங்களுக்கு கூட தற்கொலை செய்திருக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர் கண்டித்தாலோ வீட்டில் பெற்றோர் கண்டித்தாலோ உடனே தற்கொலை செய்யும் செயல் தற்போது அதிகரித்திருக்கிறது. தூத்துக்குடி அருகே குளத்தூரில் 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்திருக்கிறார்.

இப்படியான சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது அதற்கு தகவல் பரிமாற்றமும் காரணம் என்று சொல்லலாம். எனவே ஊடகங்கள் சிறார் வகையிலான தகவல்களை காட்டவே கூடாது என்று சொல்லவில்லை. செய்திகளை வெறும் தகவலாக மட்டும் சொல்ல வேண்டும் என்பதே வேண்டுகோள். நீங்கள் சொல்லுகிற செய்தி அடுத்தவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும். அடுத்தவர்களையும் செய்தியாக்கிவிட கூடாது.

அதுபோல் பகலில் நன்றாக வேலை செய்வதும் இரவில் நன்றாக தூங்குவதுமே ஒரு உடம்புக்கு நல்லது என்று மருத்துவர்களும் சொல்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்களும் சொல்கிறார்கள். அப்படியானால் இரவில் தூங்க போகும் முன் நல்ல விசயங்கள் பரிமாறப்பட வேண்டும் உடல் உறுப்புகள் எந்தவித கடும் சூழ்நிலையும் இல்லாத வகையில் இலகுவாக வேண்டும்.

நாட்டில் எத்தனை கோடிபேர் அப்படியொரு சூழ்நிலையோடு தூங்கபோகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பெரும்பாலானோர் கடும் சூழ்நிலையோடுதான் தூங்கப்போகிறார்கள். எப்படி என்று கேட்கிறீர்களா? நள்ளிரவு வரை தொலைகாட்சி முன் இருப்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அப்போதுதான் கிரைம் ஸ்டோரி பிரத்வேக சவுண்ட் எபக்டோடு காட்டப்படுகிறது. சில தொலைகாட்சிகள், இரவில்தான் பேய் படங்களை காட்டுகிறார்கள்.

இப்படிபட்ட காட்சிகளை பார்த்துவிட்டு தூங்க போவோர் மனரீதியாக பாதிக்கப்படுவதும் நாளடைவில் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதுமாக ஆகிவிடுகிறார்கள் எனவே தொலைகாட்சி ஊடகங்கள் இரவு தூங்கபோகும் முன்பாக கிரைம் ஸ்டோரி காட்டுவதை நிறுத்துங்கள். மக்களை இதமாக ஆக்கும் பாடல்கள் அல்லது காமெடிகளை தாராளமாக காட்டுங்கள். அது புத்துணர்ச்சியை கொடுக்கும் உடலுக்கு இதமான சூழ்நிலையை கொடுக்கும்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால், கேட்டுக் கொண்ட இந்த விசயங்களை பின்பற்றுங்கள் ஊடக நண்பர்களே நன்றி !

-நடுநிலை எஸ்.சரவணப்பெருமாள் (8056585872)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here