வாகைக்குளம் விமான நிலையத்திற்கு பா.சிவந்திஆதித்தனார் பெயர் ! – நாடார் மகாஜன சங்க து.தலைவர் ஜெயக்கொடி நாடார் கோரிக்கை !!

0
31
sivanthi adhithanar

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவரான பா.சிவந்திஆதித்தனார் பெயர் சூட்டவேண்டும் என்று நாடார் மகாஜன சங்க முன்னாள் துணைத்தலைவரும், தெட்சனமாற நாடார் சங்க முன்னாள் இயக்குநருமான ஜெயக்கொடி நாடார் மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, நாடார் மகாஜன சங்க முன்னாள் துணைத்தலைவரும், தெட்சனமாற நாடார் சங்க முன்னாள் இயக்குநருமான தூத்துக்குடி ஜெயக்கொடி நாடார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய துணைக்கண்டத்தில், பத்திரிக்கை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராக திகழ்ந்த பெருமைக்குரிய மாமனிதர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆவார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்மிக சிறப்புபெற்ற தமிழ் கடவுள் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழியை சேர்ந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தானர் – கோவிந்தம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகனாக 1936ம் செப்டம்பர் 24ம் தேதி பிறந்தவர் பா.சிவந்தி ஆதித்தனார்.

பள்ளி கல்வியை முடித்து, கல்லூரியில் பி.ஏ., பட்டப்படிப்பு படித்த நேரத்தில், தேசிய மாணவர் படை(என்.சி.சி)யின் தளபதியாக இருந்ததுடன், சென்னை மாநகரிலுள்ள அனைத்துக் கல்லூரிகளின் என்.சி.சி. படைகளுக்கும் தலைவராக நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர் பா.சிவந்தி ஆதித்தனார்.

தமிழர் தந்தையான சி.பா.ஆதித்தனார் 1942ல் புகழ்பெற்ற தினத்தந்தி நாளிதழை தொடங்கி, பத்திரிகை உலகில் மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார். படிக்க தெரியாத எளிய மக்களும் பத்திரிக்கை படிக்கும் வழக்கத்தை தனது தமிழ்ப்பற்று மூலமாக உருவாக்கினார். தமிழர் தந்தை என்று போற்றப்பட்ட அவரின் வழியில் பத்திரிக்கைத் துறையில் கால் பதித்த பா.சிவந்தி ஆதித்தனார் ஆரம்பத்தில் தந்தையின் நிறுவனத்தில் சாதாரண பணியாளராகவே சேர்ந்தார்.

தனது தந்தையின் நிறுவனம் தான் என்றபோதும் ‘முதலாளி’ என்ற பாகுபாடு இன்றி ஆரம்பத்தில், பத்திரிக்கை துறைக்குள் அச்சுக் கோர்ப்பவர், அச்சிடும் பணியாளர், பார்சல் அனுப்புகிறவர், பிழை திருத்துபவர் ஆகிய பணிகளை செய்தார்.

அதன்பின்பு தனது தனிப்பட்ட திறமையாலும், எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தாலும், சமூகத்தின் மீது கொண்ட அக்கறையாலும் நிருபராக மாறினார். இப்பணியில் இருந்து துணை ஆசிரியராக பதவி பெற்றார். பத்திரிக்கை என்றால் அங்கு என்னஎன்ன பணி இருக்கும், நிர்வாகம் எப்படி இருக்கும், செய்திப் பணியின் முக்கியத்துவம் என்ன? என்பதையெல்லாம் சாதாரண பணியாளராக இருந்து கற்று தேர்ந்த பிறகே பா.சிவந்தி ஆதித்தனார் நிர்வாக பொறுப்பிற்கு வந்தார்.

தனது மகனின் நிர்வாக பொறுப்புத்திறனை அறிந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், பா.சிவந்தி ஆதித்தனாரிடம் 1959ம் ஆண்டு, ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார். பா.சிவந்தி ஆதித்தனாரின் நிர்வாகத் திறமையால் தினத்தந்தி நாளுக்குநாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் துபாய் போன்ற வெளிநாடுகளிலும் தடம் பதித்து உலகம் போற்றும் தமிழ் நாளிதழாகவும், அதிக விற்பனையாகும் தமிழ் நாளிதழ் என்ற பெருமையையும் 60ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

திருச்செந்தூரில் ஆதித்தனார் நிறுவிய கல்லூரியை, பல்கலைக்கழகம் அளவுக்கு பா.சிவந்தி ஆதித்தனார் உயர்த்தினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி ஆகியவற்றின் தலைவராகவும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற் கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவன தலைவராகவும் இருந்துவந்த பா.சிவந்தி ஆதித்தனார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பத்திரிக்கை, விளையாட்டு, கல்வி, ஆன்மிகம் என பல்துறைகளிலும் செய்த சேவையை பாராட்டி இவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1994ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. அண்ணாமலை பல்கலைக் கழகம் 1995ம் ஆண்டிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2004ம் ஆண்டிலும், சென்னை பல்கலைக்கழகம் 2007ம் ஆண்டிலும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. பா.சிவந்தி ஆதித்தனார் 1982, 1983ம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாநகர ஷெரீப் ஆக நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர் ஆவார்.

தமிழ்நாட்டில், ஏராளமான கோவில் திருப்பணிகளையும் பா.சிவந்தி ஆதித்தனார் செய்துள்ளார். இதற்கெல்லாம் மேலாக விளையாட்டு துறையில், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய பெருமைக்குரிய மாமனிதர் பா.சிவந்தி ஆதித்தனார் தான். கைப்பந்து விளையாட்டில் மிகுந்த முனைப்புடைய பா.சிவந்தி ஆதித்தனார் கைப்பந்து போட்டியில் திறன்மிகு வீரர்களை உருவாக்கினார். அதோடு இந்திய கைப்பந்து விளையாட்டு சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

அகில இந்திய கராத்தே பெடரேஷன் நிறுவன தலைவராகவும் இருந்துள்ளார். இவரது சாதனையை பாராட்டி போற்றும் வகையில் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக பா.சிவந்தி ஆதித்தனார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிராமங்களில் இருந்த ‘சடுகுடு’ ஆட்டத்தை உலகம் அறிய செய்த பெருமைக்குரியவர் சி.பா.ஆதித்தனார் ஆவார். தனது தந்தையின் வழியில் சடுகுடு எனப்படும் கபடி போட்டியை ஒலிம்பிக்கில் இடம் பெற செய்து கபடி போட்டியில் நமது நாடு சாதனை படைக்க தூண்டுகோலாக இருந்த பெருமை என்றும் எப்போதும் பா.சிவந்தி ஆதித்தனாரையே சாரும்.

இலக்கியம், ஆன்மிகம், சமூகநலன் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக, பா.சிவந்தி ஆதித்தனாருக்கு கடந்த 2008ம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது தமிழர்களுக்கு எல்லாம் கிடைத்த மிகப்பெரும் வெகுமதியாகும். தமிழக அரசு பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் கட்டி கவுரவப்படுத்தியுள்ளது.

விளையாட்டுத்துறையில் மாபெரும் சாதனை படைத்த பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் வருங்கால இளம் தலைமுறையினரும், விளையாட்டு வீரர்-வீராங்கனைகளும் அவரது பெருமையை அறிந்திடும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 24ம் தேதியை ‘’தேசிய விளையாட்டு வீரர்கள் தினம்’’ என மத்திய அரசு அறிவித்திடவேண்டும்.

அதோடு பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த மாவட்டத்தில் அவரது பெயரும், திறன்மிகு தமிழ் பற்றும், சாதனைகளும் மென்மேலும் புகழ் பெற்று திகழ்ந்திட ‘’தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்டிடவேண்டும்’’ என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here