ஸ்ரீவைகுண்டம் யூனியன் கூட்டத்தில் காரசார விவாதம்

0
39
srivaikundam union meetting

ஸ்ரீவைகுண்டம், செப்.24:

ஸ்ரீவைகுண்டம் யூனியன் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் யூனியன் சாதாரண கூட்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் முத்துவிஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் இப்ராகிம் சுல்தான் வரவேற்றார்.

கூட்டத்தில், மொத்தமுள்ள 15ஒன்றிய கவுன்சிலர்களில் இரண்டு பேர் தவிர மீதமுள்ள 13பேரும் பங்கேற்றனர். கூட்டம் துவங்கி தீர்மானங்கள் வாசிக்கப்பட, 7வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள மீனாட்சிப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலை தற்போது எந்தவித அனுமதியும் இன்றி தொழிற்சாலை விரிவாக்கத்திற்கான கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த தனியார் தொழிற்சாலையால் பாதிப்பு உள்ளது என்று அப்பகுதி மக்கள் ஏற்கனவே கூறிவரும் நிலையில், தற்போது இந்த தொழிற்சாலை எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று கூட்டத்தில் காரசாரமாக கூறினார்.

இதனைக்கேட்ட பி.டி.ஓ., சுப்பிரமணியன் சம்மந்தப்பட்ட தனியார் தொழிற்சாலை எந்தவித அனுமதியும் பெறாமல், விதிமுறைகளை மீறி விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டு வருவது குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதன்முடிவில் அந்த தொழிற்சாலை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதனைத்தொடர்ந்து கவுன்சிலர் பாரத், வரும் மழைகாலத்திற்கு முன்பாக அனைத்து பகுதிகளிலும் உள்ள மழைநீர் வடிகால்களிலுள்ள குப்பைகளை சுத்தம் செய்து சீரமைத்திடவேண்டும், மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காத வகையில் உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

இதற்கு, பதில் அளித்த பி.டி.ஓ., சுப்பிரமணியன், அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்கள், மழைநீர் வெள்ளம் சூழும் பகுதிகள் குறித்து ஆய்வு செய்து உரிய தகவல்களை தெரிவித்திடவேண்டும். இந்த தகவல் அடிப்படையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதோடு 100நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலமாக அனைத்துப்பகுதிகளிலும் மழைநீர் வடிகால்கள் சுத்தப்படுத்தப்படும் என்றார்.

யூனியன் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கிடவேண்டும், அரசின் சார்பிலான இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை சரியான முறையில் மேற்கொள்ளவேண்டும் என்ற விவாதத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் 35தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதில், இன்ஜினீயர் பிரேம்சந்தர், காசாளர் யூசுப், கவுன்சிலர்கள் வாசுகி, ராமலெட்சுமி, சுந்தரி, சோமசுந்தரி, சுடலைவடிவு, பாரத், ரமேஷ், நாராயணன், முத்துசெல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here