தூத்துக்குடி அருகே கடற்கரையில் சிலிண்டர் வெடித்து விசைப்படகு, கன்டெய்னர் லாரி எரிந்து சாம்பலானது. இந்த சம்பவத்தால் ரூ.1.5 கோடி மதிப்பலான பொருட்கள் சேதமானது.
தூத்துக்குடி தருவைகுளம் 60வீடு காலனியைச் சேர்ந்தவர் சூசை அந்தோணி முத்து. இவரது மகன் அந்தோணி ராஜ் வயது 50). இவருக்கு சொந்தமான விசைப்படகு தருவைகுளம் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இதில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் படகினை வைத்து சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் சிலிண்டரின் உள்ள டியூப் ஓட்டை விழுந்ததில் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் விசைப்படகு முழுவதும் தீ பிடித்து எரிந்தது. அப்போது விசைப்படகு அருகில் ஒரு கன்டெய்னர் லாரியிலருந்து ஐஸ் கட்டிகளை இறக்கிக் கொண்டு இருந்தனர். சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒரு பாகம் கன்டெய்னர் லாரியில் உள்ள டீசல் டேங்கில் பட்டு டீசல் டேங்க் வெடித்ததில் லாரியும் தீப்பிடித்து எரிந்தது.
உடனே அருகில் இருந்தவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்ததும், தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எரிந்து கொண்டிருந்த விசைப்படகு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற விசைப்படகுகளை உடனடியாக மீனவர்கள் அப்புறப்படுத்தி கடலுக்குள் கொண்டு சென்றனர்.
இதில் விசைப்படகிலிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான வலைகளும், ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகும் எரிந்து சாம்பலானது. மேலும் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஐஸ் கட்டி ஏற்றிவந்த கன்டெய்னர் லாரியும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.