ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போன மனநலம் பாதித்த பெண் மீட்பு – மாவட்ட எஸ்.பி பாராட்டு

0
35
thoothukudi sp

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெண்ணை மீட்டு ஒப்படைத்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

சென்னை முகப்பேரில் உள்ள The Banyan என்ற சமூக சேவை அமைப்பில் பணிபுரியும் மானஷா என்பவர் தங்களது பராமரிப்பில், மாயா என்ற பெண் இருப்பதாகவும், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், மாயாவின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கக்கோரி, தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்தார்.

மேற்படி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் பெண் தலைமைக் காவலர் அலாய்ஷியஸ் ரொசாரி மேக்ஸினா மற்றும் காவலர் ஆறுமுக நயினார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து அவரின் உறவினர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்க தனிப்படையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, மேற்படி தனிப்படையினர் பல இடங்களில் தேடி விசாரணை செய்ததில் மாயா என்னும் பெயர் கொண்ட பெண்மணி யாரும் இல்லையென்ற பதிலே கிடைத்து வந்தது. இந்நிலையில் முத்தையாபுரம் சுபாஷ் நகரில் தனிப்படையினர் விசாரணை செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரது மகன் சக்தி கிருஷ்ணன் என்பவர், தனது தாயார் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவரென்றும், தாயார் பெயர் வேல்க்கனி (45) என்றும், ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போனதாகவும், அது குறித்து யாரிடமும் எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

பின் சக்தி கிருஷ்ணனிடமிருந்து அவரது தாயார் புகைப்படத்தை பெற்று மேற்படி சென்னை முகப்பேரில் உள்ள சமூக சேவை அமைப்பிற்கு அனுப்பி கேட்டபோது, புகைப்படத்திலிருக்கும் பெண்மணிதான் அங்கு இருப்பதாக உறுதிபட தெரிவித்தனர். அவர்களிடமிருந்து பெண்மணியின் புகைப்படைத்தை பெற்று சக்தி கிருஷ்ணனிடம் கேட்ட போது, அவரும் அது தனது தாயார்தான் என்று உறுதிபடுத்தினார்.

அதனடிப்படையில் சென்னை சமூக சேவை அமைப்பிலிருந்து அந்தப் பெண்ணை மீட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் முதல் மேற்படி பெண்ணை தங்களது ‘ The Banyan’ என்ற சமூக சேவை அமைப்பினர் பராமரித்து, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு உதவிய மேற்படி அமைப்பினருக்கும், மேற்படி பெண் யாரென்று, அவர்களது குடும்பத்தாரையும் கண்டு பிடித்து, அவரது மகன் சக்தி கிருஷ்ணன் மற்றும் அவரது கணவர் சிவா என்பவரிடம் ஒப்படைத்த முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான தனிப்படையினருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here