தூத்துக்குடியில் முதல்வரை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறு – திமுக புகார்

0
82
complaint dmk

தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அமைக்கப்படும் வரவேற்பு பேனர்கள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக திமுக ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்.

தூத்துக்குடி

வருகிற 13ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வர உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். இந்நிலையில் முதலமைச்சரை வரவேற்பதற்காக வாகைக்குளம் விமான நிலையம் முதல் தூத்துக்குடி மாநகர் வரை கட்சிக்கொடிகள், வரவேற்பு பதாகைகள் வைக்க அதிமுக சார்பில் மும்முரமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதில் பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, தூத்துக்குடி யூனியன் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து 9-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தூத்துக்குடி விமான நிலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அதிமுக சார்பில் கொடிக்கம்பங்கள், வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது பல இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரிய உயர் மின் அழுத்தகம்பிகளுக்கு நெருக்கமாக வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் சாயும் நிலையில் கம்பங்கள் கட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறாகவும் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. தற்பொழுது பருவமழைக் காலம் என்பதால் முதலமைச்சர் வருகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள கம்பங்கள் சாய்ந்து சாலை விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள வரவேற்பு பேனர்களையும் கம்பங்களையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here