தூத்துக்குடி
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்குள் தனியார் ஒருவருக்கு வணிக வளாகம் அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரை சந்தித்து இன்று புகார் மனு அளித்தனர்.
தொடர்ந்து இது தொடர்பாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி தாசில்தார் அலுவலகம் அமைந்துள்ள இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சித்த பொழுது இங்கு உள்ள பொது மக்களின் போராட்டத்தின் விளைவாக இந்த இடம் காப்பாற்றப்பட்டு தாசில்தார் வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த நபர் இந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சி எடுத்தாரோ அவருக்கே தாசில்தார் அலுவலகத்திற்குள் வணிக வளாகம் அமைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக வட்டாட்சியரை அணுகி விளக்கம் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என பதில் அளிக்கிறார். தாசில்தார் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம் திறப்பு நிகழ்ச்சிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். ஆகவே வணிக வளாகம் திறப்பதை ஏதோ அரசு விழா எடுப்பது போல ஏற்பாடு செய்துள்ளனர்.
இங்கு மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஆவின் பூத் அமைத்துக் கொள்ள மட்டுமே டெண்டர் விடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மாற்றுத்திறனாளிக்கு ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே தனியாருக்கு வணிக வளாகம் ஏற்படுத்திக் கொடுக்க அனுமதி அளித்ததை கண்டித்து வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.