நிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு.. ஹேங்க்மேன் பணிக்கு ராமநாதபுரம் ஹெட்கான்ஸ்டபிள் விண்ணப்பம்

0
246
crime

டெல்லி: நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை தூக்கிடும் (ஹேங்க்மேன்) பணிக்கு ராமநாதபுரம் தலைமை காவலர் விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர் திகார் சிறைத் துறைக்கும் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதையடுத்து வினய் சர்மா, முகேஷ், பவன், அக்ஷய், ராம்சிங், ஒரு சிறுவர் உள்பட 6 பேரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர். இதனிடையே மிகவும் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கு விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.

இந்த 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் 4 பேரின் தூக்கும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி துணை நிலை ஆளுநருக்கு தங்களது கருணை மனுக்களை அனுப்பினர்.

கடுங்குற்றம் செய்த இந்த 4 பேருக்கும் கருணை அளிக்கக் கூடாது என துணை நிலை ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதையடுத்து 4 பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு தூக்குத் தண்டனை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கான தண்டனை நிறைவேற்ற திகார் சிறையில் ஹேங்க்மேன் இல்லை என்பதால் தண்டனையை நிவர்த்தி செய்ய மற்ற சிறைச்சாலைகளில் ஹேங்க்மேனை திகார் சிறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மேலும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து திகார் சிறையில் ஹேங்க்மேனாக இருந்தவர் குறித்த தகவல்களை அங்கிருக்கும் கிராமங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு தான் தயார் என ராமநாதபுரத்தை சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் விருப்பம் தெரிவித்து திகார் சிறையின் தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் சுபாஷ் சீனிவாசன் (42).

இவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். இவர் ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சேவைகளையும் புரிந்து வருகிறார்.

அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் நான் ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறேன். திகார் சிறையில் ஹேங்க்மேனாக பணியாற்ற விரும்புகிறேன். நான் அங்கு பணியாற்றும் போது எனக்கு ஊதியமே வேண்டாம். நீங்கள் கொடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்பேன் என உறுதி அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here