திருச்செந்தூர் அருகே மருத்துவ பரிசோதனைக்காக கணவருடன் சென்ற கர்ப்பிணி பெண் காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி, அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் முருகன் (35). இவரது மனைவி ரீட்டா (28), தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்குச் செல்வதாக கூறிச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முருகனின் தந்தை சுப்பையா திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.