தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சிக்குள் சைக்கிள் ஓட்டுவதற்காக தனி வழி பாதை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகிறது என மாநகராட்சி பொறியாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாசில்லா தூத்துக்குடியை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இன்று சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் ஆகியோர் கலந்துகொண்டு மிதிவண்டி பயணம் மேற்கொண்டனர். நகரின் முக்கிய சாலைகளில் வழியே மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தில் மோட்டார் வாகன பயன்பாட்டை தவிர்ப்பது வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் ஒளிபரப்பப்பட்டன.
மேலும் மிதிவண்டி பயணத்தில் பலன்களை மக்களிடையே பரப்பும் விதமாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் பேரணி நடத்தப்பட்டது. சைக்கிள் பேரணியில் மாநகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட 59-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணி தூத்துக்குடி- பாளை சாலை வழியாக சென்று பழைய மாநகராட்சி சாலை, சிவன் கோயில் தொடர்ச்சி, தேரடி சாலை வழியாக மீண்டும் மாநகராட்சியை வந்தடைந்தது.
இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் குறித்து மாநகராட்சி பொறியாளர் சேர்மக்கனி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ”தூத்துக்குடி மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாசில்லா தூத்துக்குடியை உருவாக்கும் பொருட்டு சைக்கிள் ஃபார் சேலஞ்ச் என்பதை வலியுறுத்தி இன்று சைக்கிள் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
தற்போதைய காலத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் பொதுமக்களின் பங்களிப்பாக மோட்டார் வாகனங்கள் இயக்குவதை தவிர்த்து மிதிவண்டி பயணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த சைக்கிள் பேரணியை தொடங்கி உள்ளோம். மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் ஓட்டுவதற்காகவே தனி வழி பாதை அமைக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நிறைவு பெறும்” என்றார்.