காஞ்சி அத்தி வரதர் வைபவம்; மாலை நேர சிறப்பு நுழைவு, இனி கிடையாது

0
13
Tamil_News_large_2312393

காஞ்சிபுரம் : காஞ்சி அத்தி வரதர் வைபவத்திற்கு, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாலை நேர சிறப்பு நுழைவு, இனி கிடையாது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், திங்கட்கிழமை துவங்கியது. வெளியூர் பக்தர்கள் இந்நிகழ்வு, 40 ஆண்டுகளுக்கு பின், நடைபெறுவதால், அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வந்து, அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த பக்தர்கள், கோடை உற்சவம், கருடசேவை உற்சவம் போன்ற உற்சவ நாட்கள் தவிர, மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. மாலை, 5:00 மணிக்கு மேல், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால், மாலை நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வருவதால், அவர்களுக்கு அனுமதி மறுக்க கோவில் நிர்வாகம் தயங்கியது. இதனால், மாலை நேரத்திலும், அத்தி வரதரை தரிசிக்க, வெளியூர் பக்தர்களுக்கு நேற்று முதல், அனுமதி வழங்கப்படுகிறது.

உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட மாலை, 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை தரிசன நேரத்தில், வெளியூர் பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.இதனால், உள்ளூர் பக்தர்களுக்கு எந்த சிறப்பு நுழைவும் இனி கிடையாது. மாலை நேரத்தில், சிறப்பு நுழைவு கிடையாது என்பதால், ஆதார் அட்டையை பதிவு செய்து, ரசீது பெற, உதவி மையங்களில் கால் கடுக்க நின்ற பக்தர்கள், வருத்தம் தெரிவிக்கின்றனர்.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில், கோடை உற்சவம் இன்று துவங்குவதால், அத்தி வரதரை, மாலை, 5:00 மணி வரை மட்டுமே, பக்தர்கள் தரிசிக்க முடியும். வரும், 10ம் தேதி வரை, கோடை உற்சவமும், 11ல், ஆனி கருடசேவையும், 25 முதல் ஆக., 4 வரை, ஆடி பூரம் உற்சவமும், ஆக., 13 மற்றும் 14ல், ஆளவந்தார் சாற்றுமுறையும், 15ல், ஆடி கருடசேவையும் நடைபெற உள்ளது. இந்த நாட்களில், மாலை, 5:00 மணி வரை மட்டுமே அத்தி வரதரை தரிசிக்க முடியும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here