மருத்துவ கல்வி: ஓபிசியின் 50% இடஒதுக்கீடு பறிப்பு- ஸ்டாலின், வைகோ கண்டனம்

0
93
stalin - vaiko

சென்னை: மருத்துவ கல்வியில் ஓபிசியின் 50% இடஒதுக்கீடு பறிப்புக்கு மத்திய அரசு மற்றும் தமிழகத்தின் அதிமுக அரசுதான் காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மருத்துவ கல்வியில் ஓபிசிக்கு நடப்ப்பாண்டில் 50% இடஒதுக்கீடு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் பெஞ்ச், நடப்பாண்டில் 50% இடஒதுக்கீடு வழங்க முடியாது என தீர்ப்பளித்தது.

தமிழகத்தில் அதிர்ச்சி உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் போக்கால்தான் உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பு வழங்க நேரிட்டது என அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக அரசு மீது புகார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 50% இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை. பாஜகவுடன் இணைந்து அதிமுக மாணவர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பறித்துள்ளது; கனவை கலைத்துள்ளது என கூறியுள்ளார்.

மத்திய அரசின் வஞ்சகம் மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ வெளியிட்ட அறிக்கை: மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும். இந்தப் பிரச்சினையில். மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்ததற்கு, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

ரவிக்குமார் கண்டனம் விசிக எம்.பி. ரவிக்குமார் இது தொடர்பாக கூறுகையில், மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% மட்டுமல்ல 27% கூட வழங்கமுடியாது என பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தது. அதனால்தான் இன்று உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீடு இல்லை என்கிறது. பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமையை மறுக்கும் பாஜக அரசைக் கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here