கொங்கராயகுறிச்சியில் பள்ளி மாணவ, மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொங்கராயகுறிச்சி கிளையும், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவபிரிவும் இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் சிறப்பு முகாம் கொங்கராயகுறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு, கிளைத்தலைவர் ருசிஇஸ்மாயில் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் பால்ராஜ், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பார்த்தீப சங்கர், மாவட்ட துணைச்செயலாளர் சிக்கந்தர், கிளைச்செயலாளர் முகமதுகலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஷேக்மன்சூர் வரவேற்றார்.
முகாமில், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்தமருத்துவர் செல்வக்குமார் கலந்துகொண்டு மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி பேசியதாவது, நிலவேம்பு குடிநீர்தான் தற்போது டெங்குகாய்ச்சலை தடுப்பதற்கான முதல்நிலை மருந்தாக சித்தமருத்துவத்தில் பயன்பட்டு வருகிறது. காய்ச்சல் வந்தவர்கள் நிலவேம்பு குடிநீரை முதல்தேர்வாக எடுத்திடவேண்டும்.

வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்குகாய்ச்சலும் சாதாரணமாக வந்துசெல்லும் காய்ச்சல் தான். ஆனால் அதற்குவேண்டிய மருத்துவசிகிச்சைகளை தகுந்த நேரத்தில் எடுக்கவேண்டும். காய்ச்சல் வந்து மூன்று நாட்களுக்கு பின்னரே அதன் அறிகுறி தெரியும். காய்ச்சல் அறிகுறி வந்தவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையை அணுகி தகுந்த மருத்துவசிகிச்சைகளை தவறாமல் பெற்றால் எளிதில் குணமாகிடலாம்.
தற்போதுள்ள காலகட்டத்தில் மாணவ, மாணவியர்கள் அதிகமானவர்கள் கிட்னி பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்த்திட தினமும் குறைந்தது 3முதல் 5லிட்டர் தண்ணீர் தவறாமல் குடித்திடவேண்டும், சிறுநீர் கழிப்பதை அடக்கி வைத்திடக்கூடாது, சத்தான கீரைகள், காய்கறிகள், பழங்கள், எள், கடலை போன்ற நவதானிய உணவுகளை கண்டிப்பாக உண்ணவேண்டும், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை தவறாமல் செய்திடவேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து பள்ளியின் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில், மருத்துவ பணியாளர்கள், தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மீரான், பீர்முஜ்புர்ரகுமான், உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் ராமன், மணிகண்டன், ரத்தினசாமி, சண்முகவேல், முருகன், ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், பள்ளி முதல்வர் சுமதி நன்றி கூறினார்.