மண்ணின் ரசாயனத் தன்மையை தெரிந்து கொள்வது அவசியம்: மண் பரிசோதனை அலுவலர்

0
122
man news

மண்ணின் ரசாயனத் தன்மை சீர்கெட்டு நிலவளம் பாதிக்கப்படும். இதனால் மண்ணின் ரசாயனத் தன்மையை தெரிந்து கொள்வது அவசியம் என்றார் மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ஜெயலட்சுமி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மண் பரிசோதனை செய்வதன் அவசியம், மண்ணில் தோன்றும் கோளாறுகளை அவ்வப்பொழுது அறிந்து சீராக்கிவிடவும், மண்னின் உரச்சத்து இருப்பை அறிந்துகொண்டு உரங்களை தேவைக்கேற்ப இடவும், நிலத்தின் ரசாயனத் தன்மைக்கேற்ற உர வகைகளை வாங்கி தக்க முறையில் இட்டு, இட்ட உரத்திற்கு அந்த பருவத்திலேயே அதிக பயனடையவும் மண் பரிசோதனை தேவைப்படுகிறது.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவும், இதரப் பொருள்களும் அளிக்க இதுகாறும் பயனில்லா நிலம் என்று கருதப்பட்ட நிலமும்கூட இன்று சாகுபடிக்கு கொண்டுவர வேண்டியுள்ளது. இவற்றின் குறைகளை அறிந்துகொண்டு அதனைக் கட்டுப்படுத்த மண் பரிசோதனை செய்வது அவசியம். கிணறுகளில் உள்ள உப்புநீரை பாய்ச்சும்போது பல நல்ல விளை நிலங்களில் உப்பின் அளவு அதிகரிக்கிறது.இந்நிலையில், அங்கக எருக்கள் இடுவது தற்போது குறைந்து வருகிறது. ஆகவே, மண்ணின் ரசாயனத் தன்மை சீர்கெட்டு நிலவளம் பாதிக்கப்படும் நிலை தோன்றி வருகிறது.

ஆகவே, மண்ணின் ரசாயனத் தன்மையை தெரிந்துகொள்வது அவசியம். மண் பரிசோதனை முடிவுகளில் அமில கார நிலைப்புள்ளி, மின் கடக்கும் திறன், சுண்ணாம்பு இருப்பு நிலை, மண்ணின் வகை, மண்ணில் உள்ள சத்துக்களின் நிலை ஆகியவை கிடைக்கின்றன.மண் பரிசோதனை செய்து அமில கார நிலைப்புள்ளிகளை அறிந்து அதற்கான நிலச்சீர்திருத்தம் செய்தபின் பயிரிடுவதால் நிலத்தின் ரசாயனத்தன்மை பாதுகாக்கப்படும். நிலத்தின் அமில கார நிலைப்புள்ளி 6.0-வில் இருந்து 8.0 வரை இருந்தால் அது நன்னிலம் ஆகும். இங்கு எந்தப் பயிரையும் பயிரிடலாம். அவரவரிடம் உள்ள நிலத்தில் நினைத்த பயிரை பயிரிட இட்ட உரம் முழுமையாக கிடைத்திட, செய்த செலவிற்கு அதிக வருவாய் கிடைத்திட நிலத்தை நடுநிலைக்கு கொண்டு வருவது அவசியம்.

எனவே, மண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.தொடர்புக்கு, கோவில்பட்டி வேலாயுதபுரம் மண் பரிசோதனை நிலையத்தின் மூத்த வேளாண்மை அலுவலர் அலுவலகத்தை அணுகலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here