தேவையை பொறுத்து கூடுதல் வெங்காயம் – தூத்துக்குடி கலெக்டர் தகவல்

0
10
thoothukudi collector

தூத்துக்குடி பொதுமக்களின்‌ தேவையை பொறுத்து கூடுதலாக வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வெங்காய வரத்து குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெங்காயம் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. வெளிச் சந்தையில் ஒரு கிலோ 120 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் வெங்காயத்தை தங்களது அத்தியாவசிய தேவைக்கு கூட வாங்கி பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் வெங்காய பதுக்கலை தடுக்க வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக கூட்டுறவு விற்பனை அங்காடி மூலமாக ஒரு கிலோ வெங்காயம் ரூ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடியில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45 க்கு விற்பனை செய்யும் நிகழ்ச்சியை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இதன்படியாக தமிழகம் முழுவதும் படிபடியாக பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்திருந்தார். அதன்படி தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் பண்ணைப் பசுமை காய்கறி அங்காடியில் விற்பனைக்காக 10 டன்‌ வெங்காயம் நேற்று வந்திறங்கியது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பசுமை பண்ணை காய்கறி அங்காடிகளில் வெங்காயம் கிலோ ரூ.45 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ’’மத்திய கூட்டுறவு சங்கங்களின் விற்பனை இணையத்தில், தமிழக கூட்டுறவு சங்கங்களின் விற்பனை இணையம் வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் நாசிக்கில் இருந்து விற்பனைக்காக வெங்காயம் வரவழைக்கப்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் 10 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த விலையின்படி பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் 9 இடங்களில் பண்ணை பசுமை மினி சூப்பர் மார்க்கெட்களில் வெங்காய விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். நேற்று ஒரே நாளில் மட்டும் 3500 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் தற்பொழுது வரை 1000 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களிடம் இருக்கும் வரவேற்பை பொருத்து அதிகப்படியான விற்பனை மையங்களை திறந்து வெங்காய விற்பனையை தொடங்குவோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here