சாத்தான்குளம் , நவ. 2:
சாத்தான்குளம் அருகே உள்ள செங்குளம் பாசன விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதி மற்றும் நிவாரண தொகையினில் கையூட்டு பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஆழ்வார்திருநகரி வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஈடுபடுவதாக கருப்புக்கொடி ஏந்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் அருகிலுள்ள செங்குளம் பாசனத்தில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் நெல் வாழை பருத்தி உள்ளிட்ட சாகுபடி செய்து வருகின்றனர். இதில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஆழ்வார்திருநகரி வேளாண்மைத்துறை மூலம் பயிர் சாகுபடி நடைபெறும் முன்பு அதற்கு தேவையான உரம் விதைகள் சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட நோய்களுக்கு முன்பணமாக நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செங்குளம் பாசன விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் நிவாரண தொகை களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய விதைகள் மற்றும் நிவாரண தொகைகள் முறைகேடாக கையூட்டு பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்களுக்கு ஆழ்வார்திருநகரி வேளாண்மை துறை அலுவலர்கள் வழங்கி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதத்தில் செங்குளம் பாசன விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர்.
விவசாயிகளின் கோரிக்கை மற்றும் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று காலை செங்குளம் பாசன விவசாயிகள் அரை நிர்வாணத்தில் கருப்பு கொடி ஏந்தி ஆழ்வார்திருநகரி வேளாண்மைத் துறை அலுவலர்களை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து செங்குளம் விவசாயிகள் சங்க செயலாளர் முருகேசன் கூறுகையில், விவசாயிகளுக்காக மத்திய அரசு கொடுக்கும் அனைத்து நிதிகளிலும் வேளாண்மைத் துறையினர் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு கிடைக்கக் கூடிய நிதிகளை பெற ஆழ்வார்திருநகரி வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நிதிகளை பெறமுடிகிறது என்றார்.
விவசாயி சுடலைமுத்து கூறியதாவது, ஆழ்வார்திருநகரி வேளாண்மை துறை அலுவலகத்தில் சொட்டு நீர் பாசனத்திற்கான நிதியை பெற கடந்த 4ஆண்டுகளாக அலைந்தும் இது வரை கிடைக்கவில்லை. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே விவசாயத்திற்கு தேவையான நிதி கிடைக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
செங்குளம் பெரியகுளம் விவசாய சங்கத் தலைவர் முருகேசன் சுடலைமுத்து சண்முகவேல் சுடலை குமார் லட்சுமணன் ஞானப்பிரகாசம் ஹரிகிருஷ்ணன் செல்வராஜ் பேச்சியம்மாள் லலிதா தர்ம லட்சுமி பேச்சியம்மாள் அமிர்தம் சீதை ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.