மத்தியரசின் மல்டி பெஷாலிட்டி மருத்துவமனை திட்டத்தை மாற்றும் தமிழக அரசு - பாஜக கண்டனம்
PMJVK
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியகிராம் (PMJVK) திட்டத்தின் கீழ், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136.35 கோடி மதிப்பீட்டில், 637 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் இதயநோய், நரம்பியல் (Neurology), சிறுநீரகம், விபத்து மற்றும் அவசரம், புற்றுநோய் ஆகியவைகளுக்கு சிகிச்சை பெற தூத்துக்குடியில் இருந்து மதுரை அல்லது நாகர்கோவில், கேரளா என்று வெளியிடங்களுக்குதான் நோயாளிகளை அழைத்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு நிதிவுதவியுடன் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியகிராம் (PMJVK) திட்டத்தின் மூலம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற தமிழ்நாடு அரசு முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில அரசின் இத்தகைய மாற்றும் திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் வரும் 20ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நிதியுதவியுடன், பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை, தூத்துக்குடி மட்டுமின்றி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு இந்த மருத்துவமனை மிக அவசியமான மருத்துவ மையமாக இருக்கும். பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை என்பதை மாற்றி குழந்தைகளுக்கான மருத்துவமனை என்று ஒரு துறைக்கு மட்டும் சம்பந்தபட்ட மருத்துவமனை என்று மாற்ற திமுக அரசு முயற்சி செய்து வருவது கண்டிக்கதக்கது.
இந்த மருத்துவமனை மகப்பேறு அல்லது குழந்தைகள் நல சிகிச்சைக்கு மட்டும் என்று ஒதுக்கப்படாமல், இதய நோய் சிகிச்சை, நரம்பியல் (Neurology), சிறுநீரக சிகிச்சை, விபத்து மற்றும் அவசர சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைகளும் வழங்கும் மருத்துவமனையாக செயல்பட செய்ய வேண்டும். PMJVK திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு குறைந்த செலவில் உயர் மருத்துவ சிகிச்சை வழங்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது. அத்துடன், நவீன ICU, அவசர சிகிச்சை பிரிவு, MRI, CT Scan போன்ற மேம்பட்ட பரிசோதனை வசதிகள், ரத்த வங்கி, நவீன அறுவை சிகிச்சை அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டது. இதனை ஒரு துறை சார்ந்த மருத்துவமனை என்று மாற்றுவது, மத்திய அரசின் திட்ட நோக்கத்திற்கு எதிரானது, இதனால் தென் மாவட்ட மக்களுக்கு தேவையான பல்வேறு உயர் சிகிச்சைகள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
எனவே திமுக அரசின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்தும், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மல்டி பெஷாலிட்டி மருத்துவமனையாகவே திறந்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 20 தேதி வெள்ளிக்கிழமை தூத்துக்குடி VVD சிக்னல் அருகில், பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஆர்.சித்ராங்கதன் அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் ரூ.136.35 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தென் மாவட்ட மக்களின் உயிர் காக்கும் மருத்துவ மையமாக செயல்பட வேண்டிய சூழலில், அதைப் பயன்படுத்துவது தொடர்பான முடிவுகள் பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
nadunilai.com