உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு
Uvari
தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றாக விளங்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாவான தைப்பூச தேர்த்திருவிழா இவ்வாண்டு கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மனிதன் தன் கைப்பட அமைக்காத, தாமே சுயமாக தோன்றி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுயம்பு லிங்கமாக விளங்கும் இத்தலத்தில், இவ்வாண்டு தைப்பூச திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நாளான நேற்று ஒன்பதாம் நாள் திருவிழாவில், அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை நடைபெற்றது. பின்னர் கோயிலில் இருந்து சுவாமி சந்திரசேகரர் – மனோன்மணி அம்பிகை தேருக்கு புறப்பாடு, ரதாரோகனம், ரத உற்சவம் நடைபெற்றது.
திருத்தேரை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேராசிரியை நிர்மலா, மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் விநாயகர் தேரும், அதனைத் தொடர்ந்து சந்திரசேகரர் – மனோன்மணி அம்பிகை எழுந்தருளிய பெரிய தேரும் நான்கு வீதிகளிலும் ஆடி அசைந்து சென்றது. தேரோட்டத்தின் போது பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேவாரம், திருமுறை பாராயணம், பஜனை பாடல்கள் பாடியவாறு தேரை இழுத்தனர். தேர்கள் நிலைக்கு வந்தடைந்ததைத் தொடர்ந்து தீர்த்தவாரி, மூலவர் சிறப்பு அபிஷேகம், வெற்றிக்கான சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
மாலையில் உற்சவர் சிறப்பு அபிஷேகம், சாய்ரட்சை பூஜை, இரவு ராக்கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சந்திரசேகரர் – மனோன்மணி அம்பிகை ரிஷப வாகனத்தில் வீதி உலா, வான வேடிக்கை, சமய சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் உவரி கடலில் புனித நீராடி, கிணறு மற்றும் தெப்பக்குளங்களில் தீர்த்தம் எடுத்து, கோயிலை சுற்றி வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இங்கு வழங்கப்படும் சந்தனத்தை உடல் முழுவதும் பூசி பக்தி பரவசத்தில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சிவபெருமானின் விட்டுக்கு மண் சுமந்த வரலாற்றை நினைவுகூரும் வகையில், இக்கோயிலில் மட்டுமே நடைபெறும் தனித்துவமான நேர்த்திக்கடனாக, பக்தர்கள் கடலில் இருந்து பிளாஸ்டிக் பெட்டிகளில் மணல் எடுத்து தலையில் சுமந்து கரையில் குவித்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் கேரளாவிலிருந்தும் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
பத்தாம் திருவிழாவான வரும் 2ஆம் தேதி, மூலவர் – உற்சவர் சிறப்பு அபிஷேகம், பஞ்சமூர்த்தி திருவிழா உலா, உதயகாலம், சாய்ரட்சை, ராக்கால சிறப்பு பூஜைகள், சந்திரசேகரர் – மனோன்மணி அம்பிகை தெப்பக்குளத்திற்கு எழுந்தருளி தெப்ப உற்சவம், சேர்க்கை தீபாராதனை, திருவாசகம் முற்றோதல், சமய சொற்பொழிவுகள், தேவார இன்னிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உவரி போலீசார் மேற்கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
nadunilai.com