அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோவில்
Vinayagar kovil
புதுச்சேரி : 24.12.2025
பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோவிலே மணக்குள விநாயகர் திருக்கோவில். இத்திருத்தலத்தின் மேலண்டைப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர்.
தல சிறப்பு – விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவில்லை, சென்றுகொண்டே இருக்கிறது. இதில் வற்றாத நீர் எப்போதும் உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோவில் இந்தக் கோவில் மட்டுமே. உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.
சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார். விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பது இங்கு மட்டுமே.
nadunilai.com