தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் 22-ம் தேதி தொடங்கி 3 நாள்கள் கல்வெட்டுகள் புகைப்படக் கண்காட்சி
kamaraj College
தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் ‘காலந்தோறும் இந்தியக் கல்வெட்டுகள்’என்ற தலைப்பில் 22,23,24 ஆகிய 3 நாட்கள் கல்வெட்டுகள் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில், இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு, சென்னை மற்றும் காமராஜர் கல்லூரி வரலாற்றுத் துறை ஆகியவை இணைந்து நடத்தும் ‘காலந்தோறும் இந்தியக் கல்வெட்டுகள்’ என்ற தலைப்பிலான கல்வெட்டுகள் புகைப்படக் கண்காட்சி வரும் 22-ம் தேதி (செவ்வாய்க்கிழமை)தொடங்குகிறது. காமராஜர் கல்லூரி அரங்கில் நடைபெறும் இக்கண்காட்சி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
இந்தியாவில் கல்வெட்டு மரபு தோன்றிய விதம், அதன் வளர்ச்சி, பல்வேறு காலகட்டங்களில் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட எழுத்து மற்றும் மொழிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் செய்திகள் புகைப்படங்கள் மற்றும் விளக்கக் குறிப்புகளுடன் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
மேலும், தமிழ்க் கல்வெட்டுகளின் பரிணாம வளர்ச்சி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் குறித்த தகவல்கள் ஆகியவையும் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்டறியப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளின் புகைப்படங்கள், அவை அமைந்துள்ள இடங்கள், அவற்றின் வரலாற்றுப் பின்னணி மற்றும் அவற்றின் மூலம் அறியப்படும் தகவல்கள் ஆகியவையும் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
பண்டைய கால மக்களின் வாழ்க்கை, ஆட்சி முறை, நிர்வாகம், நில அளிப்பு, வரி வசூல், வணிகம், சமூக அமைப்பு, பொருளாதாரம், சமயம் மற்றும் பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற்கு கல்வெட்டுகள் முக்கிய வரலாற்று ஆதாரங்களாக விளங்குகின்றன.
அந்த வகையில், அருங்காட்சியகங்களில் மட்டுமின்றி கல்வெட்டுகளை நேரடியாக பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் புகைப்படங்கள் மற்றும் விளக்கங்களுடன் காட்சிப்படுத்துவதன் மூலம், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் குறித்த ஆய்வில் ஈடுபடும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.
மேலும் விவரங்களுக்கு, தூத்துக்குடி காமராஜர் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் ஏ.தேவராஜ் அவர்களை 98946 97387 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
nadunilai.com