தூத்துக்குடியில் அரசு பஸ் நடத்துனர் விஷம் குடித்த விவகாரம்: 2 அதிகாரிகள் இடமாற்றம்
Tnstc News
தூத்துக்குடியில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் அரசு பேருந்து தாமதமாக இயக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஏற்பட்ட நடவடிக்கைகளுக்கு இடையே, அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தூத்துக்குடி கோட்ட மேலாளர் மற்றும் நகர கிளை மேலாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து ஸ்பிக்நகர், முள்ளக்காடு, பழையகாயல், அகரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக ஏரல் செல்லும் 54டி அரசு பேருந்து, பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் தாமதமாக வருவதாக அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. அன்னை சரவணனிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 16-ம் தேதி எம்.எல்.ஏ. அந்தப் பேருந்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் தெரிவித்ததைப் போல பேருந்து தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தூத்துக்குடி நகர கிளை மேலாளர் சுரேஷிடம் எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்ததுடன், பேருந்து ஓட்டுநர் ராம்குமார் மற்றும் நடத்துனர் ஆறுமுகம் ஆகியோரிடம் உரிய அறிவுரை வழங்கி, பேருந்தை குறிப்பிட்ட நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கிளை மேலாளர் சுரேஷ், ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விளக்கம் கேட்டதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பேருந்தை அவர்கள் இயக்க முடியாத நிலையில் இருந்தால் அவர்கள் இருவரையும் வேறு பேருந்தில் பணியமர்த்துமாறு சக அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்படி மறுநாள் ஓட்டுநர் ராம்குமார் வேறு வழித்தடப் பேருந்தில் பணிக்கு சென்றுள்ளார். ஆனால் நடத்துனர் ஆறுமுகம் மட்டும் செல்லாமல் அங்கேயே இருந்ததாகவும், அப்போது அவர் திடீரென தான் கொண்டு வந்த பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நடத்துனர் ஆறுமுகத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்துனர் ஆறுமுகம் மற்றும் கிளை மேலாளர் சுரேஷ் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சம்பவத்தின் தொடர்ச்சியாக அரசுப் போக்குவரத்துக் கழக தூத்துக்குடி கோட்ட மேலாளர் சண்முகம், திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலகத்தின் ஏடியாகவும், தூத்துக்குடி நகர கிளை மேலாளர் சுரேஷ், திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலகத்தில் கமர்சியல் ஆபரேசனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல இயக்குநர் செல்வம் பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, நாகர்கோவிலில் பணியாற்றி வந்த வேல்முருகன் தூத்துக்குடி கோட்ட மேலாளராகவும், தூத்துக்குடி புறநகர் டெப்போவில் பணியாற்றி வந்த கார்த்திக் தூத்துக்குடி நகர கிளை மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாக நியமிக்கப்பட்ட வேல்முருகன் மற்றும் கார்த்திக் ஆகியோர் தங்களது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். அதுபோல் சண்முகமும், சுரேஷும் நெல்லை தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தற்போது பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், கிராமப்புறங்களில் இருந்து பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் அரசு பேருந்து சேவையையே பெரிதும் நம்பியுள்ளனர். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதி செய்வதுடன், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பணிச்சுமை மற்றும் குறைகள் தொடர்பாகவும் நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே நடத்துனர் ஆறுமுகம் தற்கொலைக்கு முயன்றதற்கான முழுமையான காரணம் மற்றும் இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் சொந்த காரணங்கள் உள்ளனவா, நிர்வாக ரீதியான காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீஸ் மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாக விசாரணையின் முடிவில் முழுமையான தகவல்கள் தெரியவரும்.
nadunilai.com