இன்னமும் உள்ளது வெள்ள நேரத்தில் உருவான பள்ளம் : தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலை அவலம்
High way
பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகள் அகலமாக இருப்பதால் விபத்துக்கள் நடைபெறாது என்று நம்புகிறோம். ஆனால் அங்குதான் அதிகம் நடப்பதுபோல் தெரிகிறது. அந்த லிஸ்ட்டில் இருக்கிறது தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலை. விபத்துக்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்தால் அதுபற்றி தெரிந்து கொள்ளலாம். அதிவேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. ஆடு,மாடு,நாய் போன்ற விலங்குகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் அதையும் தாண்டி சாலையில் வைக்கப்படும் பேரிகார்டுகள், எதாவது ஒரு காரணத்திற்காக ஏற்படும் பள்ளங்கள் மூலமும் விபத்துக்கள் ஏற்படுகிறது என்பதையும் ஒத்துக் கொண்டாக வேண்டும்.
தூத்துக்குடியை அடுத்த மறவன்மடம் அருகே சமீபத்தில் ஏற்பட்ட விபத்துக்களை கணக்கிட்டால் அதற்கான காரணங்கள் தெரியவரும். மறவன்மடம் சந்திப்பு பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க பேரி கார்டு வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே வெள்ள நேரத்தில் ஏற்பட்ட பள்ளம் இதுவரை முழுமையாக சீரமைக்கப்படாமல் இருக்கிறது. அதில் வாகனங்கள் திடீரென இறங்கி, ஏறுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் அதன் அருகில் நிறுத்தப்படும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதை தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளோ, ஹைவே பெட்ரோல் காவல்துறை அதிகாரிகளோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. பேரி கார்டு வைத்தால் வேகத்தை குறைத்து விபத்தை தடுக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் அதே வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் எத்தனைபேர் அதில் முட்டி மோதி காயமடைகிறார்கள்? எத்தனைபேர் உயிரை விடுகிறார்கள் என்பதை உற்று கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
தேசிய நெடுஞ்சாலையில் தட்டப்பாறை விலக்கு பகுதியில் சாலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதிலிருந்து சில கி.மீ தூரத்தில் வெள்ள நேரத்தில் ஏற்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படாமல் கிடக்கிறது என்றால் என்ன அர்த்தம் என்று கேள்வி கேட்க வைக்கிறது.
தூத்துக்குடி பை-பாஸ் சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம், ஐடிஐ, கோரம்பள்ளம், அந்தோணியார்புரம், மறவன்மடம்,தட்டப்பாறை விலக்கு, பிளாக் ஆபீஸ், வாகைகுளம் வரையில் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. இடையில் ஒரு சில இடங்களில் சர்வீஸ் ரோடு இருக்கிறது. அத்துடன் சேர்த்து இத்தனை பகுதிகளையும் இணைக்கும் வகையில் சர்வீஸ் ரோடு அவசியமாகும். ஹைவே பெட்ரோல் வாகனத்தின் ரோந்து நேரங்களை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.
தற்போது மிக அவசரமாக மறவன்மடம் சந்திப்பில் உள்ள வெள்ள காலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கையாகும். தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.